இந்தியா என்று பேசுகிறோம், இந்தியர் என்று பாடுபடுகிறோம்.
அய்ரோப்பியனைப் பாருங்கள். அய்ரோப்பாவைப் பற்றி எந்த ஐரோப்பியனுக்காவது கவலை
இருக்கிறதா? ஜெர்மனியைப் பாருங்கள், ஆங்கிலேயரைப் பாருங்கள், மற்றும்
ஐரோப்பிய சிறிய நாட்டாரையும் பாருங்கள். அவர்களில், எவன் வாயிலாவது ஐரோப்பா, ஐரோப்பியன்
என்கின்ற பேச்சோ, உணர்ச்சியோ வந்ததாகக் காட்டுங்கள் பார்ப்போம்! ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்சு
என்றுதான் நாட்டுப் பேச்சும், மொழிப் பேச்சும், மக்கள்பேச்சும் பேசுவார்கள். அந்த மாதிரி உணர்ச்சிதான் கொண்டு
இருக்கிறார்கள். அதனால்தான் அந்த நாடுகள் இவ்வளவு பிரசித்தமாகவும், இவ்வளவு
மேன்மையாகவும் இருந்து வருகின்றன. அவர்கள் தங்கள் நாட்டில் சுதந்தரத்தோடு
இருந்துகொண்டு நம்மை ஆட்கொள்ள ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொண்டு மடிகிறார்கள்.
அப்படிப்பட்ட உணர்ச்சி இல்லாமல் இருந்தால், அவர்கள் நம்மைப்போல் மற்ற
நாடுகளுக்குள் ஐக்கியப்பட்டு படத்தில்கூட உருவில்லாமல் போய்விட்டிருப்பார்கள்.
இன்று நடக்கும் பெரிய போர், எதற்காக நடக்கின்றது? தன் தன்
நாட்டையும், சமுதாயத்தையும், மொழியையும் காப்பாற்றுவதற்கும் விஸ்தரிப்பதற்குமே ஒழிய வேறென்ன? ஐரோப்பாவைக்
காப்பாற்றவா?
எனவே ஒரே மதம், ஒரே பழக்க வழக்க, நடை, உடை, பாவனை, உணவு உள்ள ஐரோப்பிய மக்கள், இன்று தங்கள் தங்கள் நாட்டின் மொழியின்
பேரால், அடியோடு ஒழிந்து போனாலும் சரி என்று போராடித் தங்கள் நாட்டை
சமுதாயத்தைக் காப்பாற்றவும், மேன்மைப்படுத்தவும் தங்களைச்
சுரண்டுகிறவர்களையும், தங்களை அடக்கி ஒடுக்கி இழிவுபடுத்துகிறவர்களையும் ஒழிப்பதற்குப்
போராடுகிறார்களே ஒழிய ஐரோப்பியனாயிற்றே, கிறிஸ்தவனாயிற்றே என்று ஐரோப்பியர்
எந்த ஐரோப்பிய நாட்டாரிடமாவது இணங்கி இருக்கிறார்களா?
ஜெர்மனியர்களின் வீரத்துக்குக் காரணம், ஜெர்மனி என்கின்ற தேசிய மொழி
உணர்ச்சியும், ஜெர்மனியர் என்கின்ற சமுதாய உணர்ச்சியும்தானே? தமிழனுக்கு
எங்காவது அந்த உணர்ச்சி இருக்கின்றதா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக