திங்கள், 18 டிசம்பர், 2017

நாம் அஞ்ஞானிகள்


ஞானம் என்றால் அறிவு என்று பொருள். அஞ்ஞானம் என்றால் (பகுத்து அறியும்) அறிவற்ற தன்மை என்பது பொருள். இன்றைய மக்களாகிய நாம் பெரும்பாலோர் (பகுத்தறிவற்ற) அஞ்ஞானிகளேயாவோம். இதன் காரணம், நாம் இயற்கைத் தன்மையைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல், இயற்கை மாறு பாடான கடவுள், மதம், தெய்விகம், தெய்விக முன்னோர் கண்ட முடிவு என்பனவாகியவற்றிற்கு அடிமைகளாகிவிட்ட காரணத் தால் மெய்ஞ்ஞானம் என்பது நம்மை அணுகாமலே போய் விட்டது.

மெய்ஞ்ஞானமும், அஞ்ஞானமும்

மெய்ஞ்ஞானம், அஞ்ஞானம் என்ற சொற்களுக்கு உண்மையான பொருள் என்ன என்று பார்த்தால் மெய்ஞ்ஞானி கவலை அற்றவனாகவும், அஞ்ஞானி கவலை கொண்டவனாக வுமே இருப்பான் என்பதுதான்.

கவலை என்பதன் பொருள் பேதமற்ற (அபேத)  நிலை என்பதேயாகும்.

மனிதன் பகுத்தறிவு உரிமை உடையவனாதலால் அவன் கண்டிப்பாக - கட்டாயமாக - அபேத நிலையில் உள்ள மெஞ்ஞானியாகவே இருக்க வேண்டியவன் ஆவான். ஆனால், அப்படிக்கில்லாமல் பேத நிலைக்கு ஆளாகி அஞ்ஞானியாகவே இருந்து வருகிறான்.

மக்களுக்குள் பேத நிலை நிலவுவதேன்?

மனிதருக்குள் (சமுதாய வாழ்வில் வரும்) மனித சமுதாய ஜீவியத்தில் பேதநிலை ஏன் இருக்க வேண்டும்? என்பது சிந்திக்கத்தக்கதாகும். அதிலும் மனித சமுதாயத்தை அடக்கி ஆட்சிபுரிய அரசு என்ற ஆட்சிக்கு உட்பட்ட மக்களிடையில் பேதநிலை ஏன் இருக்கவேண்டும்? ஏன் இருக்கிறது என்று சிந்தப்போமேயானால்,
அதன் விடை என்னவென்றால், மனித சமுதாயத்தை அடக்கி ஆளும் ஆட்சி அஞ்ஞான ஆட்சியாய் இருக்குமானால், அது கண்டிப்பாக பேதநிலை உள்ள ஆட்சியாய்த்தான் இருக்கும்.

மனித சமுதாயத்தை அடக்கி ஆளும் ஆட்சி மெய்ஞ்ஞான (பகுத்தறிவு) ஆட்சியாய் இருக்குமானால் அது கண்டிப்பாய் வாழ்வில் பேதநிலை அற்ற அபேத நிலை ஆட்சியாகத்தான் இருக்கவேண்டும்; இருந்துதான் தீரும்.

அஞ்ஞான ஆட்சி

நம் நாட்டில் இதுவரை இருந்து வந்த ஆட்சி முறையானது அஞ்ஞான ஆட்சி. அதாவது, பேதத்தை நிலைநிறுத்துவதும், மக்கள் 100-க்கு 100-பேரையும் கவலைக்கு, பேதமைக்கு உட்படுத்துவதுமான ஆட்சியே நடந்து வந்திருக்கிறது

இன்று ஒவ்வொரு மனிதனும் மற்றவனைவிட மேலான நிலையில் இருக்கவேண்டும் என்ற அளவினால் போட்டி போடுவோனாகி, சதா கவலைக்குள்ளாகிப் பல தொல்லைக்கும் தவறுதல்களுக்கும் ஆட்பட்டவனாகவே இருந்து வருகிறான். இதுதான் பகுத்தறிவு, ஆறறிவு உடைய மனிதனுக்கு அழகு.

மற்றும், இத்தொல்லைக்கு ஆக்கம் கொடுத்து, மேலும் மேலும் மனிதனைக் கீழ்த்தர மனிதனாக ஆக்குவதற்கு அரசாங்கம் கடவுளைப் பயன்படுத்திக் கொள்வதும், அதற்காக அரசாங்கம் கடவுளைக் காப்பாற்றுவதும், பிரச்சாரம் செய்வதும் அஞ்ஞான ஆட்சி என்பதைத் தெளிவு படுத்துகிறது.

இதனால், மக்களுக்குக் கவலையும், கேடும், போட்டியும் போராட்டமும் மாத்திரமல்லாமல் ஆட்சிக்கும் பல தொல்லையும் தொந்தரவும் ஏற்பட வழியாகிறது.

நாடு வளர்ச்சி பெறாமற்போனதற்கும் மக்கள் கீழ் மக்களாகவும், ஒழுக்கம், நாணயம் அற்றவர்களாகவும் ஆனதற்கும் இதுவே காரணமாகிறது.

மெய்ஞ்ஞான ஆட்சி

உண்மையான நல்ல ஆட்சி சமநிலை ஆட்சி என்றால், துலாக்கோல் முள்ளும் தட்டும்போல் ஆக்கப்படும் ஆட்சியாக இருக்கவேண்டும்.

மனிதன் பிறக்கும்போது மேல் ஜாதிப் பிறவியாகப் பிறப்பதில்லை. மனிதன் பிறக்கும்போதே செல்வவானாகப் பிறப்பதில்லை. அதுபோல் மனிதன் பிறக்கும்போது கீழ்ஜாதி யானாகவும், தரித்திரனாகவும் பிறப்பதில்லை. அப்படியிருக்க மனிதரில் கீழ்ஜாதி, தரித்திரன், மேல்ஜாதி செல்வன் என்பதாக ஏன் இருக்கவேண்டும்? மற்றும் மக்களைக் சமமாய், நீதியாய் ஆட்சி புரிய ஒரு அரசாங்கம் இருந்தும் இப்டிக் கீழ் மேல் நிலை ஏன் இருக்க வேண்டும்? இருக்கவிட வேண்டும்?

எந்நிலைக்கும் ஆட்சியே காரணம்

இதை நாம் நல்ல வண்ணம் சிந்தித்தால் இப்படிப்பட்ட கொடுமையான நிலைக்கு ஆட்சிதான் காரணம் என்ற நிலைக்குத்தான் வரவேண்டியிருக்கிறது. அதாவது ஆட்சி பெரிதும் இந்நிலைக்கு ஏற்ற மக்களாலேயே அமைக்கப்படுகிறது என்பதுடன், இப்படிப்பட்ட மக்கள் கையிலேயே ஆட்சி கிடைக்கச் செய்யப்படுகிறது என்றுதான் காணமுடிகிறது.

இதனால்தான் பேதமற்ற நிலையுடைய மக்களையும், பேதமற்ற தன்மையுடைய மக்களையும் கொண்டு ஒரு ஆட்சி யையும் காணவேண்டுமானால், அரசர்களையும், தரகர்களையும் கொன்று குவித்துத்தான் காணமுடியும்; காணமுடிந்திருக்கிறது என்ற நிதர்சனமான எடுத்துக்காட்டை, இப்படிப்பட்ட நிலையைக் கண்ட நாடுகளில் காண்கிறோம்.

சமுதாயத்தைத் திருத்தப் புரட்சி ஆபரேஷன்

இப்படிப்பட்ட நிலையைக் காண்பதும் குற்றமல்ல என்று தோன்றும்படியாகவே அதாவது இம்மாதிரி பேத நிலையை உண்டு பண்ணியவர்களுக்கும், இதை ஆதரிப்பவர்களுக்கும், அதனால் நலம் அனுபவிப்பவர்களுக்கும் தண்டனை கொடுப்பதை ஒக்குமே தவிர, கொன்று குவித்தல் என்பது கொலைபாதகமாகாது என்ற கருத்தில்தான் இம்மாதிரி மரண தண்டனைகள் நடைபெற்றிருக்கிறது என்றுதான் கருத வேண்டியிருக்கிறது.

ஆதலால், இப்படிப்பட்ட அஞ்ஞான ஆட்சியை ஒழித்துக் கட்டி பேதமற்ற மெய்ஞ்ஞான ஆட்சியை ஏற்படுத்துவது என்பது, வியாதிக்காரன் பிழைக்க அவனுக்கு ரணசிகிச்சை (ஆப்ரேஷன்) செய்வது போன்றதுதான்-ஜீவகாருண்ய செய்கையாக ஆகுமே ஒழிய, ஒரு நாளும் இம்முயற்சிக்குத் தவறான காரியமாக ஆகாது என்பது நமது கருத்து. இந்தக் கருத்தில்தான் இந்நிலை அடைய பல நாடுகளில் பெரும் பெரும் புரட்சிகள் ஏற்பட்டிருக்கின்றன என்று சொல்லலாம்; ஏற்படக்கூடும் என்று சொல்லலாம்.

மக்கள் ஞானிகளாக, பகுத்தறிவுவாதிகளாக ஆக்கப்பட்ட நாடுகளில் இம்முயற்சிகள் துவக்கப்படுமானால் இம்சைக்கு இடமில்லாமல் இஷ்டப்பூர்வமான முறையில் வெற்றியடைய லாம். ஏன் அஞ்ஞான ஆட்சியல் பேதம் ஏற்பட்டது என்று சொல்லவேண்டியிருக்கிறது ஏனென்றால், ஆட்சியின் அனுமதி யினால், பாதுகாப்பினாலும்தான் மேல் ஜாதியாயினும், செல்வவானும் வாழ முடிகிறதே தவிர இயற்கைக்கு - நீதிக்கு - சமத்துவத்திற்கு விரோதமான நிலை தானாக ஒரு வினாடியும் வாழமுடியாது.

பேதநிலை எதற்காக?

பேதநிலை எதற்காக இருக்க வேண்டும்?

பகுத்தறிவு காரணமாகத் துக்கமற்று, கவலையுற்று, குறை வற்று உள்ளதைக் கொண்டு திருப்தி அடைந்து வாழ வேண்டிய உரிமை உடையவர்களே ஆவார்கள்.

இந்தப்படி மக்கள் கவலை, துக்கம், குறை அற்று வாழ்கின்றார்களா? என்பதை மேற்பார்வை  செய்து மெஞ்ஞான ஆட்சி என்பதாகும்.

நமது நாட்டு ஆட்சி சரித்திர காலம் தொட்டு மேல் ஜாதிக் காரன் என்பவன் ஆதிக்கத்தில் செல்வவான்களிடம் இருந்து வந்திருக்கின்றது. சமுதாய பேதத்தை ஒழிக்க முற்பட்ட அரசியல் கட்சியை ஆதிக்கக்காரர்களும், அவர்களது அடிமைகளும் தேசத் துரோகக் கட்சி என்றும், வெள்ளையன் அடிவருடிகள் என்றும் கூறி பாமர மக்களை ஏய்த்துப் பதவிக்கு வந்துவிட்டார்கள். செல்வவான்களை ஒழிக்க என்று ஏற்பட்ட அரசியல் கட்சிகளை லஞ்சம் கொடுத்துச் சரிப்படுத்திக் கொண்டார்கள், செல்வவான்களும் ஆதிக்கக்காரர்களுக்கு!

இன்று இந்த ஒரு கூட்டத்தினர் ஆதிக்கத்திற்கு லஞ்சம் கொடுப்பதற்கு இல்லாத ஓர் அரசியல் கட்சி உருவாகி பலம்பெற்று வருவதால் அது ஓரளவுக்கு மெய்ஞ்ஞானம் (பகுத்தறிவு) ஆட்சித் திட்டங்களைக் கைகொள்வதால் சமத்துவமும் நேர்மையும் கிடைக்கலாம் என்றே கருதக் கூடியதாக இருக்கிறது.

நேரு காமராசரின் சமதர்மத் திட்டம்

விளக்கமாகச் சொல்லவேண்டுமானால், காலஞ்சென்ற நேருவும், திரு. காமராசரும் திட்டமிட்டு அமலுக்குக் கொண்டு வந்த சமதர்ம (சோஷ்யலிச) கொள்கை ஆட்சியானது, மெய்ஞ்ஞான-பகுத்தறிவு ஆட்சி என்றே சொல்லப்படத்தக்கதாகும். அச்சம், தர்மம், சமுதாய பேதத்தை நல்ல வண்ணம் அழிக்கக்கூடியதும், செல்வ பேதத்தைப் படிப்படியாய் அழித்து வரக்கூடியதுமான (தர்மம்) கடமை கொண்ட தர்மமாகும்.

சுகவாழ்வு அளிக்கும் திட்டம்

மெய்ஞ்ஞானத்தை-(பகுத்தறிவை)ப் பற்றிச் சிந்திப்பதே பாபகாரியம் என்று கருதப்பட்ட - ஆதாரங்களையுடைய நாட்டு மக்களிடையில் இந்த அளவுக்குக் கொள்கைகளும் திட்ட நடப்புகளும் வர நேர்ந்தது. உண்மையிலேயே குருடனுக்கும் நொண்டிக்கும்-ஒளியும் தடியும் கொடுத்தது போன்ற பேருதவியேயாகும். இந்தத் திட்டம் நிறைவேறுமானால் மக்கள் துக்கமற்று, கவலையற்று, குறைவற்று, சுகவாழ்வு - மோட்ச வாழ்வு (சுகம் என்றால் மோட்சம்; மோட்சம் என்றால் சுகம் என்றுதான் அர்த்தமாகும்)  வாழமுடியும்; பொதுவில் அறிவு வளரும்; ஆண்மை வளரும் இன்பம் வளரும்; ஈகை (தேவை) ஒழியும்.

எனவே, மக்கள், இன்றைய விஞ்ஞானத் திட்டம் கொண்ட ஆட்சியைக் கட்டுப்பாடாக ஆதரித்து அஞ்ஞான மக்கள் எதிர்ப்பை ஆண்மையுடன் கண்டித்து, எதிர்த்து, ஒழித்து ஆட்சிக்கு ஆக்கம் தரவேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன்.

நூல் : அறிவு விருந்து  
ஆசிரியர் :  - தந்தை பெரியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...