இந்நிலையில் தமிழர் கதி எப்படி இருக்கிறது? என்று பாருங்கள், சமுதாயத்தில்
தமிழன் சூத்திரனாக, வேசி மகனாக ஆகிவிட்டான். அது மாத்திரமல்லாமல் தமிழன் ஆரியனால்
தீண்டப்படாதவனாக, நடத்தப்பட்டு வருகிறான்.
கோவில்களில், ஓட்டல்களில் தமிழனுக்கு சம உரிமை இல்லை. பல தமிழர்களுக்குப் பிரவேசமே
இல்லை. இது எந்தத் தமிழனுக்குத் தெரியாது? எந்தத் தமிழனாவது இதைப்பற்றிக்
கவனிக்கிறானா? என்று பாருங்கள். பாரத நாடு சுயராஜ்யம் பெறவேண்டும். பாரத மக்கள்
விடுதலை பெறவேண்டும் என்று கூப்பாடு போடுகிறானே ஒழிய, தமிழன் மனிதனாக
வாழ வேண்டாமா? மானத்தோடு வாழ வேண்டாமா? என்கின்ற கவலை இல்லவே இல்லை. தமிழ்
மொழியை ஆரியர் தாழ்த்தி அழுத்திவிட்டார்கள். ஆனால் தமிழ்மொழி வல்லுநர்களில் பலர்
ஆரியக் கூலிகளாக இருக்கிறார்கள்.
பாரதநாடு, பாரத மக்கள், பாரத பாஷை என்பதற்கும் தமிழருக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கிறதா? எங்காவது
சம்பந்த ஆதாரமிருக்கிறதா? தன்னைப்பற்றியோ தனது மரபைப்பற்றியோ, தனது மொழியைப் பற்றியோ, மானாபிமானத்தைப்
பற்றியோ கவலை இல்லாத சமுதாயம் எப்படி முன்னுக்கு வரும்?
நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு
ஆசிரியர் : தந்தை பெரியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக