எல்லாவற்றையும்விடக் கேவலமானது, தமிழனுடைய சமய அபிமானமும், கடவுள்
அபிமானமுமேயாகும். தமிழனின் சமய அபிமானம், தமிழனை இழிவுபடுத்திய கதைகளே சமய
வேதங்களாகும். தமிழ்ப் பண்டிதர்கள் வெட்கமில்லாமல் நாலாயிரப் பிரபந்தம், தேவாரம், கந்தபுராணம், ராமாயணம் முதலிய
ஆரியர் - திராவிடர் போர்க் கதைகளைத் தமிழர் வேதங்கள், தமிழர் சமய
ஆதாரங்கள் என்கிறார்கள்.
ஜெர்மனி யுத்தங்களையும், ஜெர்மனியன் இங்கிலாந்தை வெடிகுண்டு
போட்டுச் சின்னாபின்னப்படுத்தியதையும், ஆங்கிலேயரையும் ஆங்கிலேயர்
தலைவர்களையும் வைததையும் சரித்திரமாக எழுதி வைத்ததை, ஆங்கிலேயர் வேதமாகக் கொள்வார்கள் என்று
நீங்கள் நினைக்கிறீர்களா? ஹிட்லருக்குக் கோவில் கட்டி வணங்குவார்களா, நாயன்மார்களாக
கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா?
ஆனால், தமிழர்கள் என்ன செய்கிறார்கள்? இன்று
தமிழனுக்கு அப்படிப்பட்ட கதைகள்,
சரித்திரங்கள்தானே மத ஆதாரங்களாக இருக்கின்றன.
அவற்றில் வந்தவர்கள்தானே கடவுள்களாக இருக்கின்றனர்? அல்லது ஒற்றர்கள் - அடிமைகள்தானே
ஆழ்வார்களாக நாயன்மார்களாக இருக்கின்றார்கள்? இதுவா தமிழர் சமயப்பற்று - கடவுள்பற்று
- இனப்பற்று - மொழிப்பற்று? மானப்பற்று?
இப்டிப்பட்ட கடவுள்களுக்குக் கோவில் கட்டினவர்கள் யார்? எல்லாம், தமிழர்கள்!
அக்கோவில்கள், அதன் சித்திரங்கள்,
சிற்பங்கள், அதன் பூசை உற்சவங்கள் எல்லாம்
ஆரியர்களுடைய கதைகளும், ஆரியர்களின் மேன்மைக்கு ஏற்றவைகளுமாய் இருப்பதல்லாமல் வேறு என்ன
இருக்கிறது? இதற்காகச் செய்ப்பட்ட செலவுகளும், செய்யப்படுகிற செலவுகளும், தமிழனுடையதல்லாமல்
வேறு யாருடையதாவது ஒரு காசு இருக்கிறதா? தமிழனை ஆரியன் குத்துகிறதும், வெட்டுகிறதும், காலில்
மிதிக்கிறதுமான அந்தச் சித்திர உருவங்கள் தமிழ்க் கடவுள் உருவமாக வீரமாக
வணங்கப்படுகின்றன.
(நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு - தந்தை
பெரியார்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக