தலைவர்களின் பெயர்கள் போக்குவரத்துக் கழகங்களுக்குச் சூட்டப்பட்டன; மாவட்டங்களுக்கும் சூட்டப்பட்டன! இப்படி தலைவர்களின் பெயர்களைச் சூட்டுவதால்தான் ஜாதிக் கலவரம் ஏற்படுகிறது என்று சொல்லப்பட்டது.
நாட்டுக்கும்; நாட்டு மக்களுக்கும் பாடுபட்ட தலைவர்களின் பெயர்களை நீக்கக்கூட சம்மதித்தோம்! அப்படியாவது ஜாதி ஒழியாதா - ஜாதிக் கலவரம் ஓயாதா என்பதுதான் நம் எதிர்பார்ப்பு!
பொதுவாக அரசுப் போக்குவரத்துக் கழகம் என்று பெயர் சூட்டப்பட்டது!
இப்பொழுது என்னவாயிற்று என்றால் ஓட்டுநர், நடத்துநர் ஆசைக்கும், விருப்பத்துக்கும், மத எண்ணங்களுக்கும் ஏற்ப புதுப்புது நாமகரணங்கள் பேருந்துகளுக்குச் சூட்டப்பட்டு வருகின்றன. கத்தி போய் வாலு வந்தது டும், டும், டும் என்ற கதையாகிவிட்டது.
தமிழ்நாட்டிலிருந்து குருவாயூருக்குச் செல்லும் பேருந்துக்கு கிருஷ்ணரதம் என்று பெயர்! பத்தனம்திட்டா செல்லும் பேருந்துக்கு சபரி எக்ஸ்பிரஸ் என்று பெயர்!! இப்படி அவரவர்கள் விருப்பத்துக்குத் தானடித்த மூப்பாகப் பெயர்கள் சூட்டப்படுகின்றன.தலைவர்களின் பெயர்கள் போய், கடவுள் மத எண்ணத்தோடு இப்படிப்பெயர்கள் சூட்டப்படுகின்றனவே. இது என்ன நியாயம்? இப்படி அவரவர் விருப்பத்துக்கு மதக் கண்ணோட்டத்தோடு பெயர் சூட்ட ஆரம்பித்தால், மத சர்ச்சை ஏற்படாதா?
பேருந்துகளில் திருவள்ளுவர் படம் மட்டும் வைக்கப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இப்பொழுது சரஸ்வதி, லட்சுமி, பிள்ளையார் படங்கள் பளிச் பளிச்சென்று இடம்பெற ஆரம்பித்துள்ளன. பல்வேறு மதக்காரர்கள், மத நம்பிக்கையற்றவர்கள் பயணம் செய்யும் பேருந்துகளில் குறிப்பிட்ட மதக் கடவுளைப் பெரிதுபடுத்தினால் அதனால் பிரச்சனைகள் வெடிக்காதா?
திராவிடர் தொழிலாளர் கழகத் தோழர்கள், தந்தை பெரியார் படத்தைப் பேருந்துகளில் வைக்க எவ்வளவு நேரம் பிடிக்கும்? கடவுள் மறுப்பு வாசகங்களை அச்சிட்டு ஒட்ட முடியுமா?
பொதுவான ஓர் அமைப்பில் நமது கருத்துகளைத் திணிக்கக் கூடாது என்கிற நயத்தக்க நாகரிகம் பெரியாரிஸ்டுகளுக்கு உண்டு.
இந்தப் பெருந்தன்மையைப் பலகீனமாக மற்றவர்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது அல்லவா?
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர், கர்மவீரர் காமராசர், அஞ்சாநெஞ்சன் அழகிரி போன்ற தலைவர்களின் பெயர்களும், உருவங்களும் நீக்கப்பட்ட இடத்தில் கிருஷ்ண ரதங்களும், லட்சுமி, சரஸ்வதி, பிள்ளையார்ப் படங்களும் இடம்பெறுவதை எப்படி சகித்துக் கொள்ள முடியும்?
விடுதலை ஒற்றைப்பத்தி - 1, 14.12.1999
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக