புதன், 2 ஆகஸ்ட், 2017

சி.டி.நாயகம்


சுயமரியாதை இயக்கச் செம்மல் செ.தெ.நாயகம் அவர்களின் நினைவு நாள் இன்று! (1944)

7-10-1878இல் திருச்செந்தூரையடுத்த குலசேகரன் பட்டினத்தில் பிறந்த பெருமகனார் அவர். அரசுத் துறையில் துணைப் பதிவாளராகப் (கூட்டுறவுத் துறை) பணியாற்றியவர்.

அரசுத் துறையில் பார்ப்பனரல்லாதார் தலையெடுக்க அவர் ஆற்றிய தொண்டு பற்றி பேசாத பார்ப்பனரல்லாதாரே கிடையாது. பார்ப்பனரல்லாதார் துறை கூட்டுறவுத் துறை என்று கூறப்படும் அளவுக்கு ஓர் அடித்தளத்தை ஏற்படுத்தியவரும் அவரே!

அரசு அதிகாரியாக இருந்தாலும், நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்க மாநாடுகளில் தம் குடும்பத்தவர்களைக் கலந்துகொள்ளச் செய்வார். ஓய்வுக்குப் பின் முழு நேர சுயமரியாதை இயக்கத் தளகர்த்தர் ஆனார்.

தமிழ்நாடு புரோகித மறுப்புச் சங்கத்தின் தலைவர். நாத்திகர் இயக்கத்தின் துணைத் தலைவர் என்கிற பொறுப்புகளில் எல்லாம் இருந்து முத்திரைகளைப் பதித்தவர்.

இயக்க நடவடிக்கைகளில் குடும்ப உறுப்பினர்களோடு ஈடுபாடு கொண்டவர். 1938இல் இந்தி எதிர்ப்புப் போரில் முதல் சர்வாதிகாரியும் இவரே. அப்போராட்டத்தில் சிறையும் ஏகினார்!

இயக்கத் தொண்டு பகுத்தறிவுத் தொண்டு ஒரு பக்கம். இன்னொரு பக்கம் அவரின் அளப்பரிய கல்வித் தொண்டு!

1904இல் தமது ஊரில் பெண்களுக்கான பள்ளியைத் துவக்கி, முற்றிலும் பெண்களே பணியாற்றும் நிலையை ஏற்படுத்தினார். அதன் பின் பல கல்வி நிறுவனங்களைத் தொடங்கினார்.

குலசேகரன்பட்டினத்தில் தாயம்மாள் நடுநிலைப்பள்ளி, வள்ளியம்மையார் உயர்நிலைப்பள்ளி, வள்ளியம்மையார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும், சென்னையில் தியாகராயர் மேல்நிலைப் பள்ளி, குண்டூர் சுப்பையா பிள்ளை - தியாகராயர் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தியாகராய நகர் தொடக்கப்பள்ளிகளும் இன்றும் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

குலசேகரன்பட்டினத்தில் உள்ள இவரது பள்ளியில்தான் மாணவியாக (.வெ.ரா.) மணியம்மையார் அவர்கள் அவரது இல்லத்தில் தங்கி இளங்கலை  (B.O.L.)  படிப்புப் படித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நான் செய்திருப்பதாகச் சொல்லப்படும் காரியங்களில் எதிலும் தோழர் நாயகம் பின்னடைந்தவரல்ல; அவர்களது ஆசை, ஊக்கம், உணர்ச்சி ஆகியவை எதுவும் எவ்வகையாலும் குறைந்தவையல்ல என்று தந்தை பெரியார் பாராட்டினார் என்றால் சி.டி. நாயகத்தின் பெருமையை என்னவென்று சொல்ல!

திராவிடம் பெற்ற வீரர்; ஆரியத்தோடு தொடுத்த போர் முடியுமுன்னர் மறைந்தார் என்று அறிஞர் அண்ணா கலங்கினார்.

அத்தகைய மாவீரரை சுயமரியாதைச் சுடரொளியை சுயமரியாதை இயக்கப் பவள விழா ஆண்டில் உச்சிமோந்து நினைவு கூர்வோம்!

விடுதலை ஒற்றைப்பத்தி - 1, 13.12.1999 

நூல் :  ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...