புதன், 2 ஆகஸ்ட், 2017

பனகல் அரசர்!


பனகல் அரசர் என்று அன்போடு அழைக்கப்பட்ட இராமராய நிங்காரு. அவர்களின் நினைவு நாள் இன்று! (1929)

சென்னை மாகாணத்தில் ஆறு ஆண்டுகால நீதிக் கட்சியின் சார்பில் முதலமைச்சராக இருந்தவர்.

பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்தில் அவர் காட்டிய ஆர்வமும், செய்த ஆக்க ரீதியான செயல்களும் அளப்பரியன!

அந்தக் காலகட்டத்தில் எல்லோரும் வங்காள நிர்வாகத்தைத்தான் புகழ்வார்களாம்! வங்காளம் இன்று என்ன நினைக்கிறதோ - எதைச் செய்கிறதோ, அதையேதான் நாளை இந்தியாவின் பிற பாகங்களும் நினைக்கும், செய்யும் என்று சொல்லப்பட்டது. அதை மாற்றி அமைத்தவர் பனகல் என்று பிற்காலத்தில் போற்றப்பட்டார். அந்த அளவுக்கு பனகலின் நிர்வாகம் மேன்மை பெற்றது.

அந்தக் காலகட்டத்தில் மருத்துவத் துறை என்பது வெள்ளைக்காரர்கள் - அடுத்துப் பார்ப்பனர்களின் கைகளில் கெட்டியாக இருந்தது. இதற்கொரு முடிவு காண வேண்டும் என்பதற்காக சர்ஜன் ஜெனரலின் செயலாளராக (Personal Asst.)  ஒரு பார்ப்பனரல்லாதாரை பனகல் நியமனம் செய்தார். சர்.சி.பி. இராமசாமி அய்யரும், கே.சீனிவாச அய்யங்காரும் அதனை எதிர்த்துக் கூக்குரல் போட்டனர். பனகலோ அதை இலட்சியம் செய்யவே இல்லை.

சித்தா, யுனானி, ஆயுர்வேதம் ஆகியவை அடியோடு அழிந்து போகப் போகிறது என்கிற காலகட்டத்தில் அவற்றிற்கெல்லாம் புத்துயிர் கொடுத்தார். கிராமப் பகுதியில் ஏழை - எளிய மக்களுக்கு இலவச மருத்துவ உதவி கிடைப்பதற்காக  (Rural Medical Scheme) புதிய திட்டத்தைக் கொண்டு வந்தார்.

கடவுள் ஆபத்தில் இருக்கிறார் - மதம் ஆபத்திலிருக்கிறது என்று பார்ப்பன ஏடுகள் எல்லாம் ஒப்பாரி வைத்தன.

அவர் உண்மையில் ராஜா அல்ல - அரசரும் அல்ல; பார்ப்பனரல்லாதாருக்கு அவர் ஆற்றிய தொண்டின் காரணமாக ராஜா என்று அழைக்கப்பட்டார்.

ஒரு யுத்தம் முனைந்து வெற்றிக் குறியோடு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் போர் வீரர்கள் சேனாதிபதியின் ஆக்ஞையை எதிர்பார்த்துத் திரும்பியபோது, சேனாதிபதி இறந்துபோய் விட்டார் என்கின்ற சேதி கிடைக்குமானால், அந்தச் சமயத்தில், அப்போர் வீரர்களின் மனம் எப்படித் துடிக்குமோ அதுபோல் - நமது தமிழ் மக்கள் துடித்திருப்பார்கள்  என்று பனகலின் மறைவு குறித்து தந்தை பெரியார் துடிதுடித்தார் என்றால், அப்பெருமகனாரின் சிறப்புக்கு வேறு என்ன அணிகலன் தேவை!

வாழ்க பனகல்!


விடுதலை ஒற்றைப்பத்தி - 1, 16.12.1999

நூல் :  ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...