புதன், 2 ஆகஸ்ட், 2017

மனுவாதிகள்!


குமரிமுனையில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இரு நாள்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. உலகத் தமிழர்கள் இந்த நிகழ்ச்சிப்பற்றி ஆர்வம் கொண்டிருந்தனர்.

தமிழ்நாட்டுத் தமிழர்கள்பற்றி கேட்கவும் வேண்டுமா? அதேநேரத்தில் அத்தனைப் பேரும் நேரில் சென்று பார்க்க முடியுமா என்ன?

இன்றைய அறிவியல் உலகத்தில் தொலைக்காட்சி மூலம் நேரடியாக நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க வாய்ப்புகள் உண்டே!

காலை முதல் இரவு வரை மூடத்தன - பிற்போக்குக் குப்பைகளை குவிக்கும் இந்தத் தொலைக்காட்சி மடங்கள் உருப்படியாக எப்பொழுதாவது ஒரு நேரத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக் கழுவாய்த் தேடிக் கொண்டிருக்கக் கூடாதா?

அரசுத் தொலைக்காட்சி ஏன் நேரடியாக ஒளிபரப்பவில்லையென்று மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு அவர்களே சம்பந்தப்பட்ட ஒளிபரப்புத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார். இதைவிட முக்கியத்துவம் குறைந்த நிகழ்ச்சிகளையெல்லாம்கூட நேரடி ஒளிபரப்புச் செய்திருக்கும்போது மிக முக்கியத்துவம் வாய்ந்த திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவை ஏன் ஒளிபரப்பவில்லை என்றும் குமுறியிருக்கிறார்.

திருவள்ளுவரை இந்துத்துவா குணமுடையோர் ஏற்றுக் கொள்வார்களா? ஆரியத்தின் ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுதர்மத்தை வெட்டிக் குழிதோண்டிப் புதைக்கும் பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் என்ற உயர் தத்துவத்தை மலரச் செய்த மனித குலச் சிந்தனையாளரை மனுவாதிக் கூட்டம் ஏற்றுக்கொள்ளுமா? மனுதர்ம சாத்திரத்தை அலங்கரித்து ஊர்வலமாக எடுத்துச் சென்றவர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்களாயிற்றே!

அரசியல் பதவிக்காக அந்த மனுவாதிக் கூட்டத்தோடு கரைந்துவிட்ட பிறகு அழுது என்ன! புலம்பி என்ன!!

திருவண்ணாமலைத் தீபம் என்றால், பித்தலாட்டமான முறையில் நடத்தப்படும் மகரஜோதி நிகழ்ச்சி என்றால் தொலைக்காட்சிக் கூட்டம் ஓடி ஓடிச்சென்று ஒளிபரப்பும். அதன் மூலம் ஆரியச் சரக்கை அப்பாவித் தமிழின மக்களின் மூளையில் திணிக்கலாமே! திருவள்ளுவர் அதற்குப் பயன்படமாட்டாரே - அதனால்தானே புறக்கணிப்பு!

எல்லாம் சரி, தனியார்த் தொலைக்காட்சிகளுக்குத்தான் நாட்டில் பஞ்சமே இல்லையே! அய்யன் நிகழ்ச்சியை ஏன் நேரடியாக ஒளிபரப்பக் கூடாது?

வியாபார ரீதியாக அதனால் பயன் கிடையாதாம்!

திருவள்ளுவராக இருந்தாலும் விளம்பரம் வியாபாரக் கண்ணோட்டம் தானா?
ரஜினியைவிட திருவள்ளுவர் பெரியவரா  என்ன?


விடுதலை ஒற்றைப்பத்தி - 1, 6.1.2000


நூல் :  ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...