சென்னையில் பன்னாட்டு டென்னிஸ் விளையாட்டுப்போட்டி நேற்று (4-1-2000) துவங்கியுள்ளது.இதனை கோல்டு ஃபிளேக் சிகரெட்டு நிறுவனம் நடத்துகிறது. போட்டியின் பெயரே கோல்டு ஃபிளேக் ஓபன் என்பதாகும்.
விளையாட்டுப் போட்டிகளை பல்வேறு தொழில் நிறுவனங்களும் புரவலராக (Patron) இருந்து நடத்துவது எங்கும் நடக்கக் கூடியதுதான்.
கொக்கோகோலா,
பெப்சி,
எம்ஆர்எஃப் என்பது போன்ற நிறுவனங்கள் பெரும் செலவு செய்து நடத்துவதுண்டு.
பெரும் பணம் என்பது முதலீடுதான் என்றாலும், அந்த விளையாட்டுப் போட்டிகளிடையே அவர்களுடைய நிறுவனங்கள் செய்துகொள்ளும் விளம்பரம் என்பது மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது
- அதன்மூலம் வியாபாரப் பெருக்கம் என்பது பல மடங்கு பெருகிவிடுகிறது!
யாரும் ஆதாயம் இல்லாமல் ஆற்றைக் கட்டி இறைப்பதில்லை.
கோல்டு ஃபிளேக் என்பது போன்ற சிகரெட் கம்பெனிகள் மெக்டோவல் என்பது போன்ற மதுபான நிறுவனங்கள் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும்போது அவற்றின் விளம்பரங்கள் பொதுமக்களை குறிப்பாக இளைஞர்களை எந்த அளவுக்குப் பாதிக்கிறது என்பது கவலையோடு கணிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
1996 ஜனவரியில் நியூசிலாந்து நாட்டுக்கும்,
இந்தியாவுக்கும் இடையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
அதன் பின் 5000 மாணவர்களிடையே ஒரு கணக்கு எடுக்கப்பட்டது.
புது விளையாட்டு வீரர்கள் புகைப்பிடிக்கத் தொடங்கிவிட்டனர்.
புகைப் பிடிப்பது ஆட்டத்தின் திறனை மேம்படுத்துவதாகவும்,
ஊக்கப்படுத்துவதாகவும் கூறியுள்ளனராம். இதனை பிரிட்டீஷ் மெடிக்கல் ஜர்னல் வெளியிட்டுள்ளது.
புகைப்பிடிப்பதால் தனி மனிதனும், சமூகமும்,
சுற்றுச் சூழலும் எந்த அளவு பாதிக்கப்படுகின்றனர் என்பதை ஒரு பக்கத்தில் உரக்கக் கூச்சல் போட்டுச் சொல்லிக்கொண்டே இன்னொரு பக்கத்தில் மக்கள் ஆர்வத்தோடு கவனம் செலுத்தும் கவர்ச்சி மிக்க விளையாட்டுப் போட்டிகளோடு இணைத்து, இவற்றை விளம்பரப்படுத்துவது அறிவு நாணயமாகப்படவில்லை. கைகுலுக்கி வழியனுப்பி விட்டு, அதன்பின் முதுகில் ஈட்டியால் குத்தும் நயவஞ்சகம்தானே இது?
பொது இடங்களில் புகைப் பிடிப்பதைத் தடை செய்ய வேண்டும் என்கிற குரல் எழுச்சியோடு எழுந்து நிற்கும் ஒரு காலகட்டத்தில் கோல்டு பிளேக் கம்பெனிகள் விளையாட்டு என்கிற பெயரில் விளையாட்டாகச் செய்யும் விளம்பரம் எவ்வளவு பெரிய விபரீதத்தில் கொண்டுபோய் விடும் என்பதை நமது அரசும் சிந்திக்கவேண்டும்.
போதைகள் மனிதர்களின் பாதைகளை மாற்றிவிட்டால் புத்தாயிரமும் தள்ளாடி விடும் என்று எச்சரிக்கின்றோம்!
விடுதலை ஒற்றைப்பத்தி - 1,
4.1.2000
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக