புதன், 2 ஆகஸ்ட், 2017

கோவா


கோவா இந்தியாவில் ஒரு சின்னஞ்சிறு மாநிலமாகும். அங்கு அரசியல் குழப்பங்கள் அடிக்கடி நிகழ்ந்தாலும் அவசியமான ஓர் ஆணை அரங்கேறியுள்ளது. பொது இடங்களில் சிகரெட் பிடிப்பது, எச்சில் துப்புவது தடை செய்யப்பட்டுள்ளது. இத்தடையை மீறுபவர்களுக்கு ஓராயிரம் ரூபாய் அபராதம் அல்லது சிறைத் தண்டனை அளிக்கப்படும் என்று அரசு ஆணை கூறுகிறது. புத்தாயிரத்திலிருந்து இது நடைமுறைக்கு வருகிறது.

புத்தாயிரம் புத்தியுள்ள ஆண்டாக தீமையை நெட்டித் தள்ளும் ஆண்டாக அங்கு மலர்ந்திருப்பது என்பது மணம் வீசும் மகத்தான செய்தியாகும்.

கேரள மாநிலமும் கோவாவை முந்திக் கொண்டுவிட்டது. தமிழ்நாடு அரசு சிந்திக்கும் அளவோடு நின்றுவிடாமல் செயல் என்கிற அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைக்குமாக!

புகையிலையின் அபிதானபுத்திரனாகிய சிகரெட் - ஆள் கொல்லி லேகியம் என்று மருத்துவம் கூறுகிறது.

தாம்பரம் நெஞ்சக மருத்துவமனைக் கண்காணிப்பாளர் பிரபல மருத்துவர் டாக்டர் சி.என்.தெய்வநாயகம் (மறைந்த நீதிக்கட்சித் தோன்றல் சி.டி.நாயகம் அவர்களின் பெயரன்) சென்னை அடையாறில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் புகையிலை பற்றிய அரிய பல தகவல்களை வழங்கினார் (தினமணி, 1-6-98)

புகையிலையை வெளியேற்றிவிட்டு பீடி, சிகரெட் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மாற்று வேலை கொடுப்பதற்கான வகைகளைக் கண்டறிய வேண்டும்.

இந்தியாவின் பெருமையெல்லாம் அணுகுண்டு வெடிப்பதில் இல்லை. புகையிலையை ஒழிக்கும் விஷயத்தில் ஒளிவிளக்காக இருப்பதுதான் பெருமை என்று குறிப்பிட்டார்.
புகைப் பிடிப்பதால் ஏற்படும் நோய்களுக்கு நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் பேர் பலியாகின்றனர். ஆண்டுக்கு இவ்வகையில் 35 லட்சம் பேர் மரணமடைவதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் கூறியுள்ளார்.
2020இல் இத்தொகை ஒரு கோடியாக உயருமாம். (எதில் மக்கள் உயருகிறார்கள் பார்த்தீர்களா?)

இவ்வளவுப் பெரிய ஆபத்தை வருமானம் என்கிற காரணம் காட்டி வாரி அணைத்துக் கொள்வது அறிவுடைமைதானா?

கருவுற்றிருக்கும் பெண் சிகரெட்டைப் பயன்படுத்துபவராக இருந்தால் பிறக்கும் பிள்ளைக்கு நிக்கோட்டின் நஞ்சின் பாதிப்பு ஏற்பட்டு விடுகிறதாம். இதுபற்றி பிரபல மருத்துவர்கள் சொன்னதன் அடிப்படையில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஏடு (21-3-1997)    “Babies are Ex-Smokers என்று தலைப்புக் கொடுத்துச் செய்தி வெளியிட்டது.

சிகரெட்டைப் பயன்படுத்துபவர்கள் மட்டுமல்ல; அந்தச் சிகரெட் புகையால் சிகரெட் பிடிக்காதவர்கள்கூடப் பாதிப்புக்கு ஆளாகின்றனராம். அத்தகையதோர் சமுதாயப் பொது எதிரியை எப்படி அனுமதிப்பது? குறைந்த பட்சம் பொது இடங்களிலிருந்தாவது அந்தப் பகைவனை விரட்டுவதுதான் மக்கள் அரசு என்பதற்கான மரியாதையாக இருக்கும்.

விடுதலை ஒற்றைப்பத்தி - 1, 7.1.2000


நூல் :  ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...