இந்தியாவில் சென்னை, கவுகாத்தி, கான்பூர், கராக்பூர், மும்பை, புதுடில்லி மற்றும் ரூர்க்கி ஆகிய ஏழு இடங்களில் அய்.அய்.டி. என்று கூறப்படும் உயர்தர இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. புதிதாக ஆந்திரா, பீகார், ஒரிசா, குஜராத், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலும் தோற்று விக்கப்பட்டுள்ளன.
இக்கல்லூரிகளில் சேருவதற்கு ஆண்டு தோறும் நுழைவுத் தேர்வு அகில இந்திய அளவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இக்கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை நடத்தும் பொறுப்பு கான்பூர் அய். அய்.டி.,க்கு அளிக்கப் பட்டுள்ளது. அதற்கான விளக்கச் சிற்றேடு (பிரவுச்சர்) ஒன்றினை கான்பூர் அய்.அய்.டி. வெளியிட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடுக் கான சட்டம் நிறை வேற்றப்பட்டுவிட்டது. ஆண்டுக்கு 9 சதவிகிதம் என்ற அடிப்படையில் மூன்றாண்டுகளில் இது நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டது.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கிரீமிலேயர் எனும் பொருளாதார அளவுகோல் ஒன்றினை உச்சநீதிமன்றம் திணித்தது. அதன்படி ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய் இருந்தால், அவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்று தொடக்கத்தில் வரையறுக்கப்பட்டது. அதன்பின் இரண்டரை லட்சம் ரூபாய் என்று உயர்த்தப்பட்டது. கடைசியாக ஆண்டு வருமானம் நாலரை லட்சம் ரூபாய்க்குள் இருக்கவேண்டும் என்று மத்திய அரசு ஆணை பிறப்பித்தது (ஆணை எண் 36033/2004, நாள்: 14.10.2008).
இவ்வாறு தெளிவாக மத்திய அரசின் ஆணை இருக்க, இவ்வாண்டு அய்.அய்.டி.,க்கான நுழைவுத் தேர்வுபற்றிய அறிவிப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான பொருளாதார வரம்பு ரூபாய் இரண்டரை லட்சத்துக்குள் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறது என்றால், இது எவ்வளவு பெரிய மோசடியும், அயோக்கியத்தனமும் ஆகும்?
தெரியாமல் செய்யப்பட்டுவிட்டதாக யாரும் கருதிவிடக் கூடாது. இட ஒதுக்கீட்டை ஒழிக்க முடியாத நிலையில், இப்படி சில்லரைத்தனமான விஷமங்களில் ஈடுபடுவது என்பது பார்ப்பனர்களுக்கே உரித்தான பிறவிப் புத்தியாயிற்றே!
இதையெல்லாம் யார் கவனித்துக் கொண்டு இருக்கப் போகிறார்கள்? கிடைத்தவரை ஆதாயம் என்ற போக்கிரித் தனமான பார்ப்பன வேலையல்லவா இது?
அய்.அய்.டி.,க்கு விண்ணப்பிக்கும் ஒவ்வொரு பிற்படுத்தப்பட்ட மாணவனும் ஜாதி சான்றிதழ் வாங்கச் செல்லும்பொழுது குழப்பங்கள் ஏற்படவேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டுச் செய்யப்பட்ட சதிதானே இது?
சட்ட விரோதமான, உண்மைக்கு மாறான அறிவிப்பை வெளியிட்டுள்ள கான்பூர் அய்.அய்.டி., நிறுவனத்தின்மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். எல்லோருக்கும் தெரியும் வகையில் திருத்தமும் வெளியிடவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
வலது கையால் கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை இடது கையால் தட்டிப் பறிக்க வேண்டாம்!
26.2.2011
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக