திராவிடர்கள் எத்தனையோ மேன்மையும், நாகரிகமும் தன்மானமும், வீரமும்
பொருந்திய மக்களாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கும், ஆரியர்
மிலேச்சர்களாக, காட்டுமிராண்டிகளாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கும் அவரவர்கள் கலை, சமய நூல்கள்
முதலியவைகளே போதுமான சாட்சயம் என்றாலும், உலக சரித்திர ஆராய்ச்சி நிபுணர்கள்
கண்டுபிடித்தெழுதி இருக்கிற உண்மை ஆயிரக்கணக்காகப் பார்க்கலாம் என்றாலும், மற்றும் ஆரியத்
தன்மையை உணர வேண்டியவர்கள் இந்து சமய சைவ வைணவ சம்பந்தமான, அவற்றின்
கடவுள்கள் சம்பந்தமான புராணங்களைப் பார்த்தால் கண்ணாடிபோல விளங்கும்.
அவை சிறிதும் சம்பந்தம் இல்லாத திராவிடர்கள் நிலை இன்று எப்படி
இருக்கிறது? திராவிட நாட்டில் உள்ள தெருப்பெருக்கி, கக்கூஸ் கழுவி, மூட்டை தூக்கி, வண்டி இழுத்து, பங்கா இழுத்து, எச்சிலை எடுத்து
இதுபோன்ற மற்றும் பல தொழில் செய்பவர்கள் 100-க்கு 100 பேரும் திராவிட ஆண் மகனும் திராவிடப்
பெண்மணியுமேயாகும். ஆனால், இதே திராவிடத்தில் பிழைக்க வந்துள்ள ஆரியர்கள், குஜராத்திகள், மார்வாடிகள், பார்சிகள், பஞ்சாபியர்கள்
முதலிய அந்நியர்கள் திராவிட நாட்டில் 100-க்கு 100 பேர் எப்படி உயர்ந்த, உன்னத, மேன்மையான
நிலையில் பூ தேவர்களாக கோடீஸ்வரர்களாக, மகாத்மாக்களாக, ஆச்சாரியசுவாமிகளாக, உலகப்
பிரசித்தியான பெரியோராக அறிவாளியாக விஞ்ஞானியாக விளம்பரப்படுத்தப்பட்டு
வாழ்கிறார்கள் என்பது யாரும் அறிந்ததேயாகும்.
(விடுதலை - தலையங்கம் - 22.11.1939)
நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு
ஆசிரியர் : தந்தை பெரியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக