இப்படிப்பட்ட பழைய சரித்திர உண்மைகள் நம்பப்படாவிட்டாலும் சரி, தள்ளி
வைக்கப்பட்டாலும் சரி, அதையும் பிடித்துக் கொண்டு நம் பெருமையைப் பேச நாம் வரவில்லை. ஆனால்
இன்றோ அற்புதப் பொறிகளும் அதாவது இயந்திரங்களும் புதிய புதிய அதிசயமான
கண்டுபிடிப்புகளும் இந்திய மக்கள் நித்திய வாழ்க்கையில் அனுபவித்து இன்புறும்
நூற்பு நெசவு முதலிய ஆலைகளும் தந்தி, கம்பியில்லா தந்தி, ஆகாய விமானம், நீராவி வண்டி, எண்ணெய் வண்டி, மிதி வண்டி, கிராம போன், நடிக்கும்
பேசும் சினிமா, புகைப்படம், எக்ஸ்ரே, ரேடியோ மூலம் படம் முதலான பல அற்புதங்கள் மேல் நாட்டாரால், அதுவும் சிறு
சிறு நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டு உலகத்திற்குப் பயன்பட்டு மக்கள்
இன்புறுவதைப் பார்க்கின்றோம்.
இந்தியா ஒன்றாயிருந்து அந்தராத்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும்
மகாத்மாவைத் தலைவராக, வழிகாட்டியாக, ஞானாசிரியராகக் கொண்ட இந்திய மக்கள் கண்டுபிடித்ததென்ன என்றால், கைராட்டினம்
தக்கிளி, கட்டை வண்டி, 51 ஜதை மாடுகளைப் பூட்டி இழுக்கும் விசை வேகம், கருப்பட்டி, கைக்குத்து
அரிசி, கோணி வேஷ்டி, அதுவும் முழங்காலுக்குமேல் கட்டிக்கொண்டு காட்டுமிராண்டிகளை
நினைவூட்டுதல், உலக நிலை கவனிக்காமல் உச்சிக் குடுமியைக் காட்டிக்கொண்டு மழுங்கச்
சிரைத்த தலையுடன் ஆபாசமாய்த் திரிதல் இவைதான் இந்தியா இன்றைய சகாப்த
அற்புதங்களாய்க் கண்டுபிடிக்கப்பட்டு விளங்குகின்றன.
(நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு - தந்தை பெரியார்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக