புதன், 2 ஆகஸ்ட், 2017

முளையில் தெரிந்தது!


விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்கள். நமது தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் முளைக்கும் பருவத்தில் எப்படி இருந்தார்?

சில நாட்களுக்குப் பிறகு கடைத்தெருவில் கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள திடலில் ஒரு பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில், பனிரெண்டு வயது நிரம்பாத அந்தச் சிறுவன் ஏறி நின்றுபிராமணர்களையும், நமது புராணங்களில் உள்ள ஆபாசங்களையும், கடவுள்களையும் கிழி கிழி என்று கிழிப்பதை வாயைப் பிளந்து கொண்டு நானும் பார்த்தேன். நல்லவேளை! நான் அதிலிருந்து தப்பினேன். அவன் எங்கள் அக்ரஹாரத்தின் வழியாகத்தான் வீட்டுக்குப் போக வேண்டும். அவன் போகும்போது நாங்கள் திண்ணையில் உள்ள அறையில் ஒளிந்துகொண்டு சாரங்கபாணி ஒழிக என்று கூச்சலிடுவோம்அவனோ மார்பை விறைத்துக்கொண்டு தைரியமாக நடந்து செல்லுவான். நாமும் அவனை மாதிரி ஏன் பேச முடியவில்லை என்று மனம் புழுங்கினேன். அவன் பேசிய கருத்துகளில் எனக்குச் சற்றும் உடன்பாடில்லை. அதற்குச் சரியான பதில்களும் என் மனத்தில் தோன்றின. ஒரு மேடை போட்டு அவனுக்குப் பதில் சொல்லவேண்டும் என்றெல்லாம் துடித்தேன். பல சமயம் அவன் வீட்டில் போய்க் காரசாரமாக விவாதம் புரிந்தேன். எனது நண்பர்களான பிராமணச் சிறுவர்களையெல்லாம் கூட்டி வைத்துக் கொண்டு அக்ரஹார வீட்டுத் திண்ணைகளில் நாங்கள் பொதுக்கூட்டம் போட்டோம். அதில் நான் பேசி இருக்கிறேன். கொஞ்ச நாட்களில் அந்த சாரங்கபாணியான பேர், ஊரெல்லாம் பரவிற்று. நாங்கள் அக்ரஹாரத்துக்குள்ளேயே ஆவேசமாகக் குதித்துக் கொண்டிருந்தோம்.

அந்த சாரங்கபாணிதான் இன்றைய திராவிடர் கழகப் பிரமுகரும், விடுதலை நாளேட்டின் ஆசிரியருமான எனது நண்பர் திரு. கி.வீரமணி அவர்கள்!

இவ்வாறு கூறி இருப்பவர் புகழ்பெற்ற எழுத்தாளரும், நமது பொதுச்செயலாளரின் இளமைக்கால நண்பருமான சிறுகதை மன்னன் ஜெயகாந்தன். (ஆதாரம்: ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்)

12 வயதில் மார்புப் புடைத்து நடந்து சென்ற நடை இந்த 67 வயதிலும் தளர்ச்சி அடையவில்லை. காலால் நடப்பதில் மட்டுமல்ல - கருத்தால் சிந்திப்பதில் மட்டுமல்ல - செயல்பாட்டிலும் அந்த மார்புப்புடைக்கும் வீரம் - அவர் பெயரில் ஒட்டி இருப்பதுபோலவே நடைமுறையிலும் இருக்கிறது என்பதை எதிரிகளே ஒப்புக்கொள்ளும் உண்மை!

பார்ப்பனர்கள் பாடைகட்டித் தூக்கிச் சென்றார்கள். அவர் உயிருக்குப் பலமுறை குறி வைத்தார்கள்!

என்றாலும், அவர் மார்புப் புடைத்து நடக்கிறார். காரணம் - அவரிடம் சுயநலம் இல்லை - பிறரிடமிருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லை - அவரிடம் உள்ள ஒன்றே ஒன்று பெரியார் தந்த புத்தி!

ஆம். அதுதான் பெரியார் தொண்டர்கள் என்பதற்கு இலக்கணம்

வாழ்க தமிழர் தலைவர்!


விடுதலை ஒற்றைப்பத்தி - 1, 2.12.1999

நூல் :  ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...