புதன், 2 ஆகஸ்ட், 2017

அரித்ரா


இந்து முன்னணித் தலைவர் திருவாளர் இராம. கோபாலன் அய்யர்வாள் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். தமிழன் பத்திரிகைகள் கூட சாங்கோ பாங்கோமாக வெளியிட்டுள்ளன!

தமிழ்நாட்டில் மாபெரும் தலைவர் போல நீட்டி முழங்குகிறார். திராவிட இயக்க அரசியல் கட்சிகளே தோள் கொடுக்கத் துவங்கியவுடன் தைரியம் அதிகமாகி விட்டதுபோலும்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்கவேண்டும். தண்டனையைக் குறைக்க சோனியா சொல்லியிருக்கும் சாக்குப் போக்கு அர்த்தமில்லாதது. நளினி-முருகன் குழந்தை அரித்ராவை இந்து முன்னணி வளர்க்கும். மரண தண்டனை ஒழிப்பு இப்போதுதான் ஞாபகம் வருகிறதா? இது முழுக்க அரசியல் நாடகம் - விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் இவ்வாறு சொல்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

நீதிமன்ற தீர்ப்புகளுக்கு ஏதோ மதிப்பளிப்பது போல துள்ளிக் குதிக்கும் இந்த சிகாமணிகள் - உச்சநீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதியையே மீறித்தானே பாபர் மசூதியை இடித்தார்கள் என்பதை நாடு மறக்கவில்லை.

பாபர் மசூதி இடித்த வழக்கு கடந்த ஆறு ஆண்டுக் காலமாகத் தள்ளாடிக் கொண்டிருக்கிறதே - இந்தச் சாக்குப் போக்குக்கு இவர்களின் கும்பல்தானே காரணம்?

கிரிமினல் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒருவர்தானே இன்றைய உள்துறை அமைச்சர்?

சூத்திரன் கொன்றால் சிரச்சேதம் - பார்ப்பான் கொலை செய்தால் சிகைச்சேதம் (முடியை நீக்குதல்) என்பதுதானே இவர்களின் மனுநீதி - அதுதானே அவர்கள் இன்றைக்கும் கோரும் இந்துத்துவா!

விடுதலைப் புலிகள் என்றாலோ, தமிழீழம் என்றாலோ பார்ப்பனர்களின் வயிற்றில் புளியைக் கரைப்பானேன்? தமிழர்கள் இதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.

நளினியின் குழந்தையை இந்து முன்னணி எடுத்து வளர்க்குமாம்! ஏன் அந்தக் குழந்தையையும் தமிழினத்துக்கு விரோதமான இந்துத்துவா என்கிற குரோத பால் ஊட்டி வளர்க்கலாம் என்கிற நப்பாசையா?

அந்தக் குழந்தையை எடுத்து வளர்க்கக் கோடானுகோடி தமிழர்கள் உலகமெங்கும் உள்ளனர். அதனைத் தமிழின விரோதக் கும்பலிடம் ஒப்படைக்க தமிழர்கள் என்ன ஏமாளிகளா?

அதேநேரத்தில் அந்தக் குழந்தைக்கு ஒரு தாயைக் கொண்டு வந்து கொடுக்க முடியாது என்பதை - மனித நேயம் உள்ளவர்களால்தான் உணரமுடியும்!


விடுதலை ஒற்றைப்பத்தி - 1, 3.12.1999

நூல் :  ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...