திருவாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளை
(வக்கீல்)
அவர்கள் எழுதுவது
ஞானசூரியன் கூறும் பொருள்களை நோக்குங்கால் ஞான சூரியன் ஞானசூரியன் என
ஆண்பாலாற் கூறுதல் தகுதியேயாம்.
அவன் வடமொழி வேதங்களிலும் மனுதர்ம சாஸ்திரத்திலும், காமியாகமம்
முதலியவற்றிலுமுள்ள பல சுலோகங்களை எடுத்துக்கூறிப் பொருளுரைத்துப் பொருத்தமான
கதைகளைச் சொல்லி ஆரியரின் இழிதகை ஒழுக்கங்களையும் சாதிக் கோட்பாடுகளையும், கொடுமை களையும்
நன்கு விளக்குகின்றான். அவ்வேதம் முதலியவற்றைத் தமவெனக் கொள்வோரும், அவற்றில்
மதிப்பேனும், விருப்பேனும் உடையோரும் ஞானசூரியனைப் படிப்பாராயின், அவற்றைத்
தமவெனக் கொள்ளார், மதியார், விரும்பார்.
பிராமணர்களின் யாகங்களிலும், விருந்துகளிலும் பன்றியூன், எருமையூன், பசுவூன் முதலிய
பலவகை ஊன்களை உண்டும், பானங்கள் முதலிய பலவகைக் கள்களைப் பானஞ்செய்தும் வந்தவர்களென்றும், சகோதரன்
மனைவியிடத்தும், விதவையிடத்தும், குதிரையிடத்தும், குழந்தைகள் பெற்றுச் சந்ததி விருத்தி செய்து வந்தவர்களென்றும், மேற்படி வேதம்
முதலிய வற்றிலிருந்து மேற்கொள்கள் எடுத்துக்காட்டி ருஜுச் செய்திருக்கின்றான்.
தாம் மதிக்கப்படுவதற்குரிய ஒரு சாதியார் என்று சொல்லிக்கொள்ள விரும்புவா ராயின், பிராமணர்
மேற்படி வேதம் முதலியவற்றை அக்கினி பகவானுக்கு ஆகுதி செய்தல் இன்றியமையாதது.
பிராமணப் புரோகிதர்களும், பூசாரிகளும் பிராமணரல்லாதார் களுடைய
பொருள்களைக் கவருவதற்காகத் தொன்றுதொட்டுச் செய்து வரும் சூழ்ச்சிகளையும், மோசங்களையும், கொலைகளையும்
எடுத்துக்கூறிப் பிராமணரல்லாதவர்கள் இன்னும் பிராமணப் புரோகிதர்களையும், பூசாரிகளை யும்
விரும்புகின்றார்களா என அவன் வினவுகின்றான்.
இந்து சமயம் என்பதன் பொய்களையும், புரட்டுகளையும், ஆபாசங்களையும், அச்சமயப்
பெயரால் செய்யப்படும் சடங்குகளின் வாயிலாகப் பிராமணரல்லாதார்கள்
தாழ்த்தப்படுவதையும் அக்கொள்கை களினின்றும், தாழ்வினின்றும், பிராமணரல்லாதார்கள்
தப்புவதற்குரிய அவசியத்தையும், வழிகளையும் அவன் நன்கு விளக்குகின்றான்.
வடமொழி யாகமங்களிற் சிலவற்றைத் தமவெனக் கொண்டு பிறப்பால்
சாதிவேற்றுமைகள் கற்பித்தும், சிவாலயங்களிற் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வணங்கியும் வருகின்ற
சைவர்களும், ஞான சூரியன் கிரணங் களின்று தப்பவில்லை. தாம் மதிக்கப்படுவதற்குரிய
ஒரு சாதியார் என்று சொல்லிக் கொள்ள விரும்புவாராயின், அச்சைவர் வடமொழி
ஆகமங் களைத் தமவெனக் கொள்ளும் தவறை ஒழித்தலும், சிவாலயங்கள் சில வற்றில் காணப்படும்
சிவலிங்க உருவினை மாற்றலும் இன்றியமையாதவை.
சாதி பேதமே காணாத திருக்குறள் தமிழ் மக்களிடத்தும், சிவஞான
போதசித்தாந்த சைவத் தமிழ் மக்களிடத்தும் ஞான சூரியன் கிரணங்கள் செல்லாதிருத்தல்
தகுதியே. மனிதரெல்லாம் பிறப்பினால் ஒரே சாதியாரென்றும், பிறப்பை
ஆதாரமாகக் கொண்டு சாதிகளை வகுத்தலும், உயர்வு, தாழ்வு ஏற்படுத்தலும் அநீதியென்றும்
நிலைநாட்டுகின்றான் ஞான சூரியன் - தமிழ் மக்கள் துணிவும் அஃதே என்ப பின்வரும்
திருக்குறளால் இனிது விளங்கும்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”
வ.உ.சிதம்பரம்பிள்ளை
கோயிற்பட்டி,
7.10.1927
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக