பான் பராக்கைத் தடை செய்யக்கோரி
200 இளைஞர்கள் சென்னையில் பான் பராக் நிறுவனத்தின்முன் முற்றுகைப் போராட்டம் நடத்தினர் என்ற ஒரு செய்தி இனிப்பானதோர் செய்தியாகும்.
பல்வேறு மோகங்களில் போதைகளில் சிக்கிச் சீரழிந்து போய்விட்ட இளைஞர்கள் மத்தியில் இப்படிப்பட்ட ஒரு பணியையும் இளைஞர்கள் செய்ய முன் வந்திருப்பது பாராட்டுதலுக்கும் வரவேற்புக்கும் உரியதாகும்.
இன்றைக்குச் சாதாரண வெற்றிலைப் பாக்குக் கடைகள்வரை இது விற்பனை செய்யப்படுகிறது.
பான்பராக், மாணிக்சந்த்,
சிம்லா,
குட்காக்கள் என்கிற பெயரில் இந்த நச்சுப் போதைப் பொருள்கள் விற்கப்படுகின்றன. மாணவர்கள், இளைஞர்கள்,
தொழிலாளர்கள் மத்தியிலே மிக ஆழமாக வேரூன்றி இளமையை முதுமைக் குழியில் தள்ளிக் கொண்டிருக்கின்றன.
ஆண்மையிழப்பு, வாய்ப்புற்று,
நரம்புத் தளர்ச்சி, கல்லீரல் பாதிப்பு இவையெல்லாம் இவற்றால் ஏற்படுகிறது என்று ஒரு பக்கத்தில் மருத்துவ ரீதியாகச் சொல்லிக்கொண்டே, இன்னொரு பக்கத்தில் இவை விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன என்றால்,
இதைவிட மக்கள் விரோத கேடுகெட்ட செயல் வேறு ஒன்று இருக்க முடியுமா?
மக்கள் நல அரசு (Welfare State) என்று சொல்லப்படுவதெல்லாம் வெறும் வார்த்தைதானா?
1973இல் பான்பராக் உற்பத்தி தொடங்கப்பட்டது. மன்சுக்லா மகாதேவ் பாய் கோத்தாரி என்ற குஜராத்திதான் இதன் தந்தை, சட்டைப் பையில் வெறும் 20 ரூபாயை மட்டும் போட்டுக்கொண்டு தமிழ்நாட்டுக்குப் பிழைக்க வந்த இந்த குஜராத்தி இன்றைக்கு ஆண்டு ஒன்றுக்கு
100 கோடி ரூபாய் விற்பனை செய்யும் அளவுக்கு பெரும்பணக்காரராகக் கொழிக்கிறார்.
ஒரு தனிப்பட்ட சுரண்டல் முதலாளிக்குத் தமிழ்நாட்டு இளைஞர்கள் பலியாக வேண்டுமா? இப்படி இளைஞர்கள், தொழிலாளர்கள் போதை மயக்கத்திலேயே கிடந்து உழல்வார்களேயானால், நாட்டு நடப்புப்பற்றி அவர்களுக்கு அக்கறை ஏற்பட ஏது வழி? இளமையிலேயே நரம்புத் தளர்ச்சிக்கு ஆளாகும் ஒரு கூட்டம் நாளும் பெருகி வருகிறது. இந்த ஆபத்தைத் தடுக்காவிட்டால் தமிழினம் தலைகுப்புற புதைந்து போய்விடும்.
பான் பராக் பராக் எச்சரிக்கை! எச்சரிக்கை!!
தடை செய்யப்படும் பொருள்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்க வேண்டியது இந்தப் பான் பராக் வகையறாதான்!
விடுதலை ஒற்றைப்பத்தி - 1,
18.12.1999
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக