புதன், 2 ஆகஸ்ட், 2017

இராவண லீலா


இதே நாளில்தான் 1974 டிசம்பர் 25இல் தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி அன்னை மணியம்மையார் இராவண லீலா நிகழ்ச்சியை நடத்திக் காட்டி, பார்ப்பனரல்லாத ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் கொடியை உலக அரங்கில் உயர்த்திக் காட்டினார்.

வடக்கே இராவணனையும், கும்பகர்ணனையும், இந்திரஜித்தையும் எரிக்கிறார்களே என்கிற எதிர் நடவடிக்கை மட்டுமல்ல. இதற்குள் அடங்கி இருக்கும் தத்துவம்.

தந்தை பெரியார் இராமாயணத்தை எரிக்கவில்லையா? இராமன் படத்தைக் கொளுத்தவில்லையா? இவை எல்லாம் ராம லீலாவுக்கு எதிரானவை என்று கூற முடியாதே!

இதன் தத்துவம் இராமாயணம் என்பது வருணாசிரமத்தை வலியுறுத்துவது! சம்பூகனை ராமன் வாளால் வெட்டிக் கொன்றதற்கு அவன் வாயாலேயே கூறப்படும் காரணங்கள் மிகமிக வெளிப்படையானவை! நீ சூத்திரன் - வருணாசிரம தர்மப்படி நீ தவம் செய்ய அருகனல்லன்! என்பதுதானே?

அத்தகைய இராமாயணமும் கதாநாயகன் ராமனும் மக்கள் மத்தியில் செல்வாக்குக்கு உரியனவாக ஆக்கப்படும்போது பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் தன்மான உணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டாமா? அதைத்தான் தந்தை பெரியார் செய்தார்! அவர்களின் கட்டளைப்படி திராவிடர் கழகத் தொண்டர்கள் செய்தார்கள்.

பக்தியைக் கொடுத்து பார்ப்பனரல்லாதார் மூளையை முடக்கி தங்கள் தாழ்வுக்குக் காரணமான சங்கதியை மாபெரும் தர்மமாகத் தாங்கிப் பிடிக்கச் செய்த சூழ்ச்சியை வெளிப்படுத்தும் பணியைத்தான் திராவிடர் கழகம் செய்து கொண்டிருக்கிறது.

இராமாயணத்தையும் ராமனையும் நம்பும் மதிக்கும் மக்கள் எப்படி மாற்றத்தை நோக்கி அடி எடுத்து வைக்க முடியும்?

திருப்பித் திருப்பி எதிர் முகாம்கள் அவற்றைப்பற்றிச் செய்யும் பிரச்சாரம் நம்மைத் தப்பித் தவறிக்கூட சிந்திக்கவிடாமலும், கரையேறவிடாமலும் தடுப்பதுதானே?

அன்றைக்கு ராமன் சம்பூகனைச் சூத்திரன் என்று கூறி வாள்வீசிப் படுகொலை செய்தான் என்றால், அந்த வருணாசிரம ஜாதிய உணர்வின் தாக்கம்தானே சூத்திரர்கள், உயர்ஜாதிக்காரர்கள் பஞ்சமர்களைப் பார்த்து கீழ்ஜாதி கிட்டே வராதே! என்று  கூறும் அவல நிலைக்கும் காரணமானது!

இந்த உணர்வுதானே - இதே நாளில் (1968) கீழ் வெண்மணியில் தாழ்த்தப்பட்டோர் குடியிருந்த வீடுகளுக்குப் பட்டப் பகலில் தீ வைத்து 44 பேர்களைச் சாம்பலாக்குவதற்குக் காரணமாக இருந்தது.

சூத்திர உயர்ஜாதிக்காரர்கள் மனமாற்றம் பெறவும், பாதிக்கப்படும் பஞ்சமர்கள் எழுச்சி பெறவும் - திராவிடர் கழகம் இதே நாளில் அன்று நடத்திய இராவண லீலா வழிகாட்டவில்லையா? ஒடுக்கப்பட்ட இரு பெரு மக்கள் மத்தியில் உள்ள மத உணர்வும், பேத உணர்வும் எரிந்து சாம்பலாகட்டும்! இராவண லீலா சாம்பல் அதைத்தான் உணர்த்துகிறது!


விடுதலை ஒற்றைப்பத்தி - 1, 25.12.1999

நூல் :  ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...