இன்றைய நாளேடு ஒன்றில் ஒரு செய்தி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பெட்டிச் செய்தியாகவும் வெளிவந்துள்ளது.
அப்படியென்ன அவ்வளவுப் பெரிய முக்கிய செய்தி! நாட்டு மக்களுக்கு நன்னெறியைப் புகட்டுகிறதா? புதுமை தரும் தகவலைக் கொண்டு வந்து கொடுக்கிறதா?
திருவில்லிபுத்தூரை அடுத்த சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மலையில் சாமியார் ஒருவர் இருக்கிறாராம். இதில் என்ன ஆச்சரியம்? கோவில் மலை என்றால் தடி சாமியார்களுக்கு நம் நாட்டில் பஞ்சமா? எல்லா சங்கதிகளுக்கும் கோவிலும்,
மலையும்தானே வசதியாக இருக்கின்றன!
இந்தச் சாமியாருக்கு உள்ள தனிச் சிறப்பு என்ன தெரியுமா? 27 ஆண்டுகளாக அவர் குளிக்கவில்லையாம்! அடேயப்பா, எவ்வளவுப் பெரிய முக்கியமான செய்தி. நாட்டு மக்கள் தெரிந்துகொண்டு உடனடியாகக் கடைப்பிடிக்க வேண்டிய அதிமுக்கிய செய்தி.
நாட்டில் தண்ணீர்ப் பஞ்சம் உள்ள நிலையில், இந்தச் சாமியார் நாட்டு மக்களுக்கு அப்படியொரு நல்வழியைக் காட்டிவிட்டாரோ!
இன்னும் இந்தச் சாமியாரிடம் நாட்டு மக்கள் கற்றுக்கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்று இருக்கிறது.
அது என்ன தெரியுமா? சாப்பிட்டாலும் அவர் கைகழுவமாட்டாராம்!
அடேயப்பா, இது மாதிரியான அவதார புருஷர்கள் நாட்டில் இருப்பதால்தான் மக்களுக்கு ஒருவேளைச் சோறாவது ஒழுங்காகக் கிடைக்கிறது.
இன்றும் மழையாவது அவ்வப்போது பொழிந்து கொண்டிருக்கிறது.
அப்படித்தானே!
27 வருடம் குளிக்காத, சாப்பிட்டாலும் கூடக் கைகழுவாத இந்த நாற்றம் பிடித்த மனிதரிடம் பொதுமக்கள்
- பக்தர்கள் யாரும் நெருங்காமல் பார்த்துக் கொள்வதுதான் உத்தமம்.
காரணம், நோய்க் கிருமிகளின் உற்பத்திக் கிடங்காக அவர் இருப்பார். தமிழ்நாடு அரசின் சமூக சீர்திருத்தத் துறை அந்த ஆசாமியைப் பரீட்சித்து அவசர அறிக்கை ஒன்றை வெளியிடுவது அவசியம்! அவசரம்!!
விடுதலை ஒற்றைப்பத்தி - 1,
18.3.2000
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக