வியாழன், 3 ஆகஸ்ட், 2017

தீபாவளி இனாம்!


நகராட்சியில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளி தீபாவளி இனாம் கேட்டது இலஞ்சமே என்று மும்பையில் நீதிபதி ஒருவர் தீர்ப்புக் கூறியுள்ளார். இலஞ்சம் பெற்றதாகவும், பொதுப் பணியில் இருப்பவர் நடந்துகொள்ளும் பாங்கிற்கு எதிரானது என்றும் கூறி தலா ஓராண்டு தண்டனை விதித்து ஒரே நேரத்தில் அனுபவிக்கலாம் என்று தீர்ப்புக் கூறப்பட்டுள்ளது.

சாதாரண ஒரு ஏழை தொழிலாளி இனாம் கேட்டது பெரிய குற்றமா? இதற்கு இவ்வளவுப் பெரிய தண்டனையா? என்கிற வினாக்கள் எழக்கூடும். இந்த வினாவில் நியாயம் இருக்கவே செய்கிறது. அதே நேரத்தில் மதம், பண்டிகைகள் என்ற போர்வையில் அரசு  ஊழியர்கள் வசூல் செய்வது, இனாம் கேட்பது என்பவை எல்லாம் ஏதோ சட்டப்படியானது போலவும், அதிகாரத் தோரணையில் நாட்டில் நடைபெற்று வருவதற்கு இந்தத் தீர்ப்பு கண்டிப்பாக ஒரு மரண அடியாகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை என்று சொல்லிக் கொண்டு, அரசுத் துறையில் அடிமட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை வசூல் வேட்டை ஓகோ என்று நடைபெறுகிறது. காவல் நிலையங்கள் இந்தப் பண்டிகைக் காலத்தில் ஒலிபெருக்கிக் சகிதத்துடன் அலறுவதைப் பார்த்திருக்கவில்லையா?

அரசு ஏலத்திற்கு சில காவல் நிலையங்கள் போவதும் உண்டு.

மும்பை குற்றவியல் நீதிபதி எஸ்.பி.குச்சாடி அளித்த தீர்ப்பு இந்தச் சீர்கேடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்குமா? தமிழ்நாட்டு நீதிபதிகளின் கண்களைத் திறக்குமா? அரசு அலுவலர்களும் திருந்துவார்களா?


விடுதலை ஒற்றைப்பத்தி - 1, 10.3.2000

நூல் :  ஒற்றைப் பத்தி - 1

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...