புதன், 2 ஆகஸ்ட், 2017

ஜெயேந்திரர்


ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பின்போது இந்துக்கள் கோவில்களுக்குச் சென்று வழிபாடு செய்வது இங்கு நடந்துகொண்டுதானிருக்கிறது. இந்த ஆண்டு காஞ்சி சங்கராச்சாரியார் திருவாளர் ஜெயேந்திர சரஸ்வதியார் ஒரு புதுக் கரடியை அவிழ்த்து விட்டார்.இந்துக் கோவில்களை நடு ஜாமத்தில் திறக்கக் கூடாது; வழிபாட்டை அனுமதிக்கக் கூடாது; ஆகமத்துக்கும் சாஸ்திர சம்பிரதாயங்களுக்கும் இது விரோதம் என்றெல்லாம் அறிக்கையேகூட வெளியிட்டார்.

ஆனால், ஏடுகள் என்ன கூறுகின்றன? புத்தாண்டு தினத்தன்று இரவு நேரத்தில் கோவில்களில் பக்தர்கள் வழிந்தனர் என்று செய்திகள் வெளியிட்டுள்ளன.

இந்து மத மடாதிபதிக்கு அவரின் பக்தர்களிடையே எந்த அளவு மரியாதை இருக்கிறது என்பதற்கு இது ஓர் அடையாளம்!

இவ்வளவு ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு மட்டும் மடாதிபதி அறிக்கை வெளியிடுவானேன்? 2000 ஆண்டு என்று கூறி உலகம் முழுவதும் பெரிய அளவுப் பிரச்சாரம் நடைபெற்றுள்ளது. இதன் மூலம் கிறிஸ்துவர்களுக்கு அல்லவா பெருமை போய்ச் சேர்ந்துவருகிறது என்கிற இந்து மத உணர்ச்சிதான் இதற்குக் காரணம்.

அர்த்த ராத்திரியில் இந்துக் கோவில்களைத் திறக்கக் கூடாது என்று அய்திகம் பேசும் இந்த மடாதிபதி திருப்பதியில் நாளொன்றுக்கு 22 மணிநேரம் வழிபாடு சேவகம் நடக்கிறதே - அதுபற்றி இதுவரை அவர் மூச்சுவிட்டதுண்டா? வைகுண்ட ஏகாதசி என்றும், சிவராத்திரி என்றும் கோவில்களில் இரவு பூராவும் கூத்தடிக்கிறார்களே, அதற்கு என்ன பெயராம்?

கிறிஸ்தவர்கள் என்றால் ஒரே கடவுள்; முஸ்லீம்கள் என்றால் ஒரே கடவுள் என்று திருப்தி அடைந்து விடுகிறார்கள். இந்துக்களுக்கு அப்படி அல்லவே - கடவுளின் பட்டியல் கட்டுக்குள் அடங்காதே
கணக்குக்கும் புலப்படாதே! அத்தனைக் கடவுள்களைக் கும்பிட்டாலும் ஆசை அடங்காத நிலையில், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதா என்று அலைந்து திரிபவர்களாயிற்றே அவர்கள்!

நாகூர் தர்காவுக்கும், வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கும் போக வேண்டாம் என்று இந்துக்களுக்கு சங்கராச்சாரியார் கட்டளையோ, வேண்டுகோளோ விட்டுப் பார்க்கட்டுமே!

யார் மதிப்பார்கள்? இந்து மதத்தின் பலகீனங்களை பலமாகப் பாவிக்கும் மனப்போக்கு நீடிக்கும்வரை இன்னும் அது கீழாகத்தான் போய்க் கொண்டிருக்கும்; இது கல்லின் மேல் எழுத்து.


விடுதலை ஒற்றைப்பத்தி - 1, 3.1.2000

நூல் :  ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...