சதி ஒழிப்பிற்குக் காரணமான இந்தியர்களில் முக்கியமானவர் இராஜாராம் மோகன்ராய் ஆவார் என்பதை அனைவரும் அறிவார்கள். கி.பி.1811-ல் இவரது அண்ணன் ஜெகன் மோகன் அவர்கள் காலமானார். வங்காளப் பார்ப்பனர்களும் புரோகிதர்களும் ஜெகன்மோகன் சவத்துடன் அவரது மனைவியையும் உயிருடன் சேர்த்துக் கட்டித் தீ வைத்தனர். தீப்பற்றிய சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த மாது சூடுபொறுக்கமாட்டாமல் அலறித் துடித்து எழுந்து ஓட முற்பட்டாள்.
சதியை நடத்தி வைத்தது மூலம் புண்ணியம் சம்பாதித்துக் கொள்ள வந்த பார்ப்பனர்களும் புரோகிதர்களும் அவரைச் சும்மா விடுவார்களா? அவரைப் பிடித்து மூங்கில் தடிகளால் அடித்து நொறுக்கி நெருப்பில் தள்ளிக் கொன்றார்கள். இந்தக் கோர சம்பவம் இராஜாராம் மோகன்ராயை மிகவும் கலங்கச் செய்தது. அன்று முதலே எப்படியாவது இக்கொடிய வழக்கத்தை ஒழித்தே தீரவேண்டும் என்று உறுதிபூண்டார்.
18-ஆம் நூற்றாண்டில் தஞ்சையில் வாழ்ந்து வந்த மராட்டியப் பார்ப்பன வாலிபன் ஒருவன் அரசாங்க உத்யோகத்தில் ஈடுபட்டிருந்தான். அவன் கோகிலா என்ற பெண்ணை மணந்து இனிது வாழ்ந்து வரும்பொழுது திடீரென்று இறந்துபோனான்.
அவரது மனைவி கோகிலாவையும் அவனுடய சவத்துடன் உடன்கட்டை ஏற்றப் பார்ப்பனர்கள் அவரை அலங்கரித்துக் கணவனின் சவத்திற்குப் பின்னதாக ஊர்வலமாகச் சுடுகாட்டிற்கு அழைத்துப் போனார்கள்.
இதனை வேடிக்கை பார்க்கக் கூடிநின்ற ஆங்கிலேய இராணுவத்தினர் சிலர் மிகவும் மனமிரங்கி இவரை எப்படியாவது இக்கொடியவர்களின் கையில் இருந்து விடுவித்து உயிர்ப்பிச்சை அளிக்க வேண்டும் என்று கருதினர். இவர்கள் துணிந்து கூட்டத்திடையே புகுந்து அவரை மீட்டுக் காப்பாற்றினர்.
இப்படி உடன்கட்டை ஏற்றப்பட இருந்த பெண் விடுவிக்கப்பட்டது பார்ப்பனர்களுக்கு மிகவும் சினத்தை மூட்டியது. பெருத்த ஏமாற்றத்துடன் கணவனின் பிணத்தை மட்டும் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று எரித்துவிட்டு வீடு திரும்பினர்.
பார்ப்பனர்கள் உடன்கட்டை ஏறுவதில் இருந்து தப்பிச் சென்ற அந்தப் பெண்ணை அவள் வீட்டிற்குத் திரும்பிவர ஒட்டாமல் தடுத்தார்கள். அவரை வீட்டிற்கு அழைத்து வைத்துக்கொண்டால் அந்தக் குடும்பத்தையே ஜாதிப் பிரஷ்டம் பண்ணி வைத்துவிடுவோம் என்றும் கூறி மிரட்டினார்கள். இப்படியாக அனாதையாகி விட்ட அந்தப் பெண்ணைப் பட்டாளத்துக்காரர்களே வளர்த்து வரலாயினர்.
அவர் இராணுவத் தலைவர் கர்னல் லிட்டன் பங்களாவிலேயே தங்கி ஆங்கில மொழியைக் கற்று நன்கு தேர்ச்சிப் பெற்றார்.
இவரே பிறகு ஸ்வாட்ஸ் பாதிரியாரால்
1778-இல் ஞானஸ்தானம் அளிக்கப்பட்டு இராயல் குளோரித்தாள் என்னும் பெயரை ஏற்றுத் திருநெல்வேலி மாவட்டத்தில் சுவிசேஷ ஊழியத்தை முதலில் துவக்கி வைத்த பெண்ணாவார்.
விடுதலை ஒற்றைப்பத்தி - 1,
01.01.2000
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக