வியாழன், 3 ஆகஸ்ட், 2017

வாட்டர்


தீபாமேத்தாவின் வாட்டர் திரைப்படத்தை எதிர்த்து இந்துத்துவா வெறியர்கள் வன்முறை வெறியாட்டம் நடத்தி வாரணாசியில், கங்கைக்கரையில், படப்பிடிப்பை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்திவிட்டனர்.

இந்து மதத்தின் பிற்போக்கான கருத்துகளைக் கட்டிக் காப்பதில் அவர்கள் எப்பொழுதும் ஒரு யுத்த வெறியோடு களத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள் என்பதை - இதுவரை அவர்களைச் சரியாக அறியாதவர்கள்கூட இப்பொழுது தெரிந்துகொள்ளும் நிலை ஏற்பட்டுவிட்டது. அந்த வகையில் நன்றி!

அந்த இந்துத்துவா குரூரம் எந்த அளவுக்கு இப்பொழுது சென்றிருக்கிறது தெரியுமா?

வாட்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த பிரபல நடிகை ஷபானா ஆஸ்மி தாம் ஏற்றுக் கொண்ட விதவைப் பாத்திரம் இயல்பாக - தத்ரூபமாக இருக்கவேண்டும் என்பதற்காக மொட்டையே அடித்துக்கொண்டார். எத்தனை நடிகைகளுக்கு இது போன்ற துணிவு வரும்!

வாட்டர் திரைப்படத்தில் நடிப்பதற்காக அந்த நடிகைக்கு மொட்டை அடித்த தொழிலாளி சியாம்லால்மீது இப்பொழுது சங்பரிவார் இந்துத்துவக் கும்பலின் வெறி திரும்பி இருக்கிறது.

நீதானே அந்த நடிகைக்கு மொட்டை அடித்தாய்? ஒரு வகையில் இந்துத்துவா எதிர்ப்புக்கு நீயும் துணைபோயிருக்கிறாய்! என்று கூறி மிரட்டல் படலம் தொடங்கி இருக்கிறது.

வாட்டர் படம் என்றால் என்ன... அதுபற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. என் தொழிலை நான் செய்தேன்! என்று அத்தொழிலாளி புலம்பியும் தொல்லைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றனவாம்.

இந்தப் பிரச்சினை ஆறும் வரைக்கும் வாரணாசியைவிட்டு வெளியூர்க்குச் சென்று, அதன் பிறகு கொஞ்சகாலம் கழித்துத் திரும்பலாம் என்று அவரின் நண்பர்கள் கூறுகிறார்களாம்!

என்ன கொடுமை! ஒரு மக்கள் நாயக நாட்டில்தான் நாம் வாழ்கிறோமா? கொடிய பாசிசம் படம் எடுத்து ஆடத் தொடங்கி விட்டது. தரும அடி கொடுக்கவாவது வீட்டுக்கொருவர் புறப்படுவதைத் தவிர வேறு வழியே இல்லை.


விடுதலை ஒற்றைப்பத்தி - 1, 28.2.2000

நூல் :  ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...