இன்று மொழி ஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் அவர்கள் பிறந்த நாள் (1902).
தமிழர்கள் பெருமைப்படத்தக்க தமிழாய்ந்த பெருமகன்; மொழிப்பற்று,
இனப்பற்று இரண்டையும் கொண்ட தமிழகத்தின் ஒளி! அவரால் தமிழுலகுக்கு அளிக்கப்பட்ட நூல்கள் காலத்தை வெல்லும் கருவூலங்கள்.
குறிப்பாக ஒப்பியன் மொழி நூல் என்பது தமிழர் இல்லந்தோறும் அணி செய்யவேண்டிய வைப்பு!
ஆரிய - திராவிடரைப் பற்றி பாவாணர் கூறுகிறார்: ஆரிய - திராவிடப் போர் இந்தியர்க்குள், முக்கியமாய்த் தமிழர்க்குள்,
பிரிவினையுண்டாக்குமாறு ஆங்கிலேயரால் தோற்றுவிக்கப்பட் டதென்றும், அடிமைத் தமிழரான நீதிக்கட்சியார் அதை கடைப்பிடித்து வருகின்றனரென்றும் ஒரு சாரார் கூறி வருகின்றனர்.
ஆரிய - திராவிடப் போர் ஆரியர் இந்தியாவில் கால்வைத்த நாள் முதலாய் நடந்து வருவது. சரித்திரத்தால் அறியப்படும் ஆரிய மறைகளும் அதற்குச் சான்றாகும்.
பிராமண மதத்திற்கு மாறாக பவுத்த மதத்தைத் தோற்றுவித்த புத்தர், வடநாட்டிலிருந்த ஒரு திராவிட வகுப்பாரே.
பிரிவினையென்னும் படையால் திராவிடரைக் கொண்டே திராவிடரை வென்று, வடநாட்டை ஆரியர் கைப்பற்றும் வரையும் போர் நடந்துகொண்டேயிருந்தது.
ஆரியர் தமிழ்நாட்டிற்கு வந்த பின், அவரது முறைகளைத் தமிழ்நாட்டிற்குத் தீங்கு விளைப்பனவாகக் கண்ட பல தமிழறிஞர், அவ்வப்போது அவற்றைக் கண்டித்து வந்திருப்பதை நெடுகக் காணலாம். (நூல் பக்கம் 66) என்று குறிப்பிட்டுள்ளார்.
பார்ப்பனருக்கு அய்யர் என்னும் பெயர் முனிவர் என்னும் கருத்தைப்பற்றி வந்ததாகும்.
முதன்முதலாய்த் தமிழ்நாட்டிற்கு வந்த காசியபன், அகத்தியன் போன்ற ஆரியப் பிராமணர், ஒழுக்கத்தால் தமிழ்முனிவரை ஒரு புடையொத்தமைபற்றி அய்யர் எனப் பட்டனர். பின்பு அது விரி வழக்காய், கபிலர், பரணர் போன்றவர்க்கும்,
தில்லை வாழந்தணர் போன்ற கடவுளன்பர்களுக்கும், இறுதியில் எல்லாப் பார்ப்பனர்களுக்குமாக வழங்கி வருகிறது!
(நூல் பக்கம் 37) என்கிறார் பாவாணர்.
அய்யன் பார்ப்பான் ஆகிய ஆபத்தை மொழி ஞாயிறே சுட்டிக்காட்டியுள்ளார்.
வாழ்க பாவாணர்!
விடுதலை ஒற்றைப்பத்தி - 1,
25.2.2000
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக