புதன், 2 ஆகஸ்ட், 2017

ஜெய் ஸ்ரீராம்!


நாடாளுமன்றத்தில் கடந்த இரு நாள்களாகக் கடும் குழப்பம்- அமளி! பாபர் மசூதி இடிப்பில் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் மாண்புமிகு அமைச்சர்களாக முக்கிய பதவிகளில் இருக்கிறார்களே இது சரியா - நீதியா - தர்மமா - நியாயமா என்ற கேள்விக் கணைகள் மக்களவை விதானத்தைத் துளைக்க ஆரம்பித்தன.

அவர்கள்மீது குற்றப்பத்திரிகை தானே தாக்கல் செய்யப்பட்டுள்ளது - என்ற பதில் வந்த நேரத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட சேடப்பட்டி முத்தையாவை மாத்திரம் அமைச்சர் பதவியிலிருந்து ஏன் விலகச் சொன்னீர்கள் என்ற கேள்வி எதிர்த் தரப்பினரிடமிருந்து சுருக்கென்று கிளம்பியது.

வேறு வழியின்றி சம்பந்தப்பட்ட மூவரும் பதவி விலகல் கடிதத்தை பிரதமரிடம் கொடுத்தும், பிரதமர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது நல்லவர் - வல்லவர் - ஜென்டில்மேன் பாலிட்டீஷியனின் உதாரணக் குணத்தைத்தான் வெளிப்படுத்தும்.
பாதிப்புக்குள்ளானவர்கள் பதற்றப்படவும், பாயவும் உரிமை படைத்தவர்கள்தான்.

குற்றமிழைத்தவர்கள் கொஞ்சம்கூட தவறை உணர்ந்தவர்களாகவும் தெரியவில்லை. மக்களவையிலும், மாநிலங்களவையிலும், ரத்தம் வடியும் சிறுபான்மையினர் காயத்தின்மீது நெருப்பை அள்ளிக் கொட்டுவது போலவும் பேசி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் மக்களின் பிரதிநிதிகள் நிறைந்த அவை இரு நாள்களாகச் செயல்படாமல் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது.

ஆளும் கட்சியினர் கண்ணாடி வீட்டில் இருப்பவர்கள் - அவர்களே கல்லெறிய ஆரம்பித்தால் அதன் கதி என்னவாகும்?

அவையை விட்டு அவர்கள் வெளியேறும்போது - ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டு வந்தார்களாம்!

எப்படி இருக்கிறது? ஆக இன்றைய தினம் ராமராஜ்யம் நடக்கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன எடுத்துக்காட்டுத் தேவை?

பிரச்சினையே - பாபர் மசூதியை இடித்து - ராமன் கோவில் கட்டுவதுபற்றித்தான். ஆளும் பா...வினரின் இந்த முழக்கம் - கூட்டணி தர்மத்தை வெளிப்படுத்தவில்லை. அவர்களின் தனித்தன்மையான ராமன்தான் தலைத் தூக்கி நிற்கிறான்!


மத சார்பற்ற அரசியல் சட்டத்துக்குச் சத்தியம் செய்து கொண்டவர்கள் சத்தியமாக தங்களின் இந்துத்துவா கொள்கையிலிருந்து இம்மிகூட நகரவில்லை என்பதை இது நிரூபிக்கவில்லையா

8.12.1999

நூல் :  ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...