சுயமரியாதை இயக்கச் சுடரொளி பட்டிவீரன்பட்டி ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனார் அவர்களின் மறைவு நாள்
(1953) இந்நாள். அவர் பிறந்த நாள் 15-9-1893. அந்தக்கால கட்டத்தில் நாடார் சமுதாயம் என்பது கடுமையான ஒடுக்குமுறைக்கு ஆளான ஒன்று.
அத்தகைய ஒரு சமுதாயத்தில் தோன்றி, தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு மாசிலாப் பொதுத்தொண்டை ஆற்றிய பெருமகன் ஆவார்.
நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கத்தின் வழிவந்தவர்.
12 ஆண்டுகள் சென்னை சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்து அரும்பணியாற்றியவர். அந்தக் காலகட்டத்தில் அவர் முன்மொழிந்த தீர்மானம் வரலாற்றுப் பெருமை வாய்ந்தது. தாழ்த்தப்பட்டவர்கள் பொதுச் சாலைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதற்குத் தடை செய்வோரைத் தண்டிக்க வேண்டும் (4-8-1921) என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றச் செய்தார்.
அவர் 1928 முதல் 1930
வரை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சிக் கழகத் தலைவராக இருந்தபோது பேருந்துகளில் தாழ்த்தப்பட்டோர் பயணம் செய்யவும்,
பள்ளிகளில் அவர்கள் கண்டிப்பாகச் சேர்க்கப்படவும் ஆணைப் பிறப்பித்து அவை சரிவரச் செயல்படுகிறதா என்பதையும் கண்காணித்தார்.
நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்ன செய்தது என்று நாக்கில் நரம்பின்றிப் பேசும் அறிவு ஜீவிகளுக்கு
(?) இவற்றைக் காணிக்கை யாக்குகின்றோம்.
பதவிகளில் தம்மை இருத்திக் கொள்ள கரவுகள் மேற்கொள்ளும் இக்கால கட்டத்தில் இவற்றையெல்லாம் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
1944இல் நீதிக்கட்சி திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் செய்த சேலம் மாநாட்டில்,
தந்தை பெரியார் தலைமையை மாற்றிட சிலர் சூழ்ச்சிகள் மேற்கொண்டபோது அதற்கு உடன்பட மறுத்து, தந்தை பெரியார் பக்கமே நின்றவர். அவர் தம் பக்கம் உதவுவார் என்று எதிர்பார்த்த துரோகிகளுக்கு தம் செயல்மூலம் சவுக்கடி கொடுத்தார்.
1930 முதல் 1940
வரை சமுதாயத் துறையில் சவுந்தரபாண்டியனாரது ஒத்துழைப்பானது,
இன்றைய சுயமரியாதை ஸ்தாபனத்திற்கு அசைக்க முடியாத அஸ்திவாரம் என்று தந்தை பெரியார் பாராட்டினார் என்றால் இதைவிட அவருக்கு அங்கீகாரம் வேறு என்ன தேவை?
விடுதலை ஒற்றைப்பத்தி - 1,
22.2.2000
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக