வியாழன், 3 ஆகஸ்ட், 2017

கட்டாய இந்தி திணிக்கப்பட்ட நாள்


1938 பிப்ரவரி 21ஆம் நாள் சென்னை மாநிலப் பிரதமராக இருந்த சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் கட்டாய இந்தி ஆணையைப் பிறப்பித்தார்.

இந்தியின் இரகசியம் என்ன என்பதுதான் தந்தை பெரியார் அவர்களுக்குத் தெரியுமே! 1926ஆம் ஆண்டிலேயே தமிழிற்குத் துரோகமும் இந்தியின் ரகசியமும் என்ற தலைப்பில் தந்தை பெரியார் குடிஅரசு இதழில் கட்டுரை தீட்டி எச்சரித்தார்.

24-7-1937 அன்று சென்னை லயோலா கல்லூரியில் உரையாற்றிய பிரதமர் ஆச்சாரியார், சமஸ்கிருதத்தைப் படிப்படியாகப் புகுத்தவே - முதற்கட்டமாக இந்தியைப் புகுத்துகிறேன் என்றார்.

இப்போதைய நவீனக் கல்வியுடன், சமஸ்கிருதத்தையும் சேர்த்துக் கற்றுக் கொண்டால், இன்னும் ஒரு தலைமுறைக்குள் ஹிந்து மதம் இப்பொழுது இருப்பதுபோல் இராது. சமஸ்கிருதம் ரொம்ப அழகான பாஷை. அதை ஈசுவர பாஷை என்றுகூடச் சொல்லலாம் என்று குறிப்பிட்டார்.

ஆச்சாரியாரின் இந்தக் கருத்தையும் 1999ஆம் ஆண்டை சமஸ்கிருத ஆண்டு என பா...அரசு அறிவித்ததையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்து மதத்தின் வளர்ச்சி அதற்குள் பத்திரமாக இருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.

2000 ஆண்டை தமிழ் ஆண்டாக அறிவிக்க வேண்டும் என்றும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் வேண்டுகோள் விடுத்தும்கூட பிரதமர் வாஜ்பேயி அவற்றைக் கண்டுகொள்ளவே யில்லை என்பதெல்லாம் எதைக் காட்டுகிறது என்பதைத் தமிழர்கள் - பார்ப்பனரல்லாதார் புரிந்து கொள்ளவேண்டும்.

அன்று பிரதமராக இருந்த ஆச்சாரியார் பிறப்பித்த கட்டாய இந்தியை எதிர்த்து, தந்தை பெரியார் தலைமையில் தமிழகம் பொங்கி எழுந்தது. ஆச்சாரியார் வீட்டு முன்கூட மறியல் போராட்டம் நடைபெற்றது. 1269 பேர் சிறைப்பட்டனர்; அதில் 73 பெண்கள் 32 குழந்தைகளும் அடங்குவர். தந்தை பெரியாருக்கு இரண்டாண்டு கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டது.

இருந்தாலும் இறுதி வெற்றி - தமிழர்களுக்கே தந்தை பெரியாருக்கே! 1940ஆம் ஆண்டு இதே நாளில் (பிப்.21) கட்டாய இந்தியை ஒழித்து ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அந்த வகையில் இந்நாள் வரலாற்றுக் குறிப்பில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இந்நாளில் இன்னொரு முக்கியத்துவமும் உண்டு. மண்டல் குழுப் பரிந்துரைகள் அமலாக்கப்பட்டு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ராஜசேகர ஆச்சாரி (ஆந்திரா) என்பவருக்கு முதல் வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டது(1994).

இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் மத்திய அரசுத் துறையிலும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு என்பது மண்டல் குழுப் பரிந்துரையால் அமலுக்கு வந்தது. அது அமல்படுத்தப்பட தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள் தலைமையில் திராவிடர் கழகம் நடத்திய போராட்டங்களின் எண்ணிக்கை 16. மாநாடுகளின் எண்ணிக்கை 42 என்றாலும், இந்தத் திசையில் நாம் ஈட்டவேண்டிய இலக்குகள் இன்னும் உண்டு.


விடுதலை ஒற்றைப்பத்தி - 1, 21.2.2000

நூல் :  ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...