இந்திய விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள் காஞ்சிபுரம் சென்றார், காஞ்சி சங்கராச்சாரியார்களைச் சந்தித்தார் - ஆசி பெற்றார்.
காஞ்சிபுரத்தை மாதிரி நகரமாக உருவாக்குவதைப்பற்றி ஆலோசனை நடத்தினார். அதன்பின் நிருபர்களைச் சந்தித்தார். ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள காஞ்சிபுரத்தை தற்போதைய விஞ்ஞான தொழில்நுட்பத்துடன் இணைத்து மாதிரி நகரமாக உருவாக்கப்பட்டுள்ளது. இம்மாதிரி நகரில் அனைத்து வசதிகளும் இங்குள்ள மக்களுக்குக் கிடைக்கும் வகையில் உருவாக்கப்படும் என்று நிருபர்களிடம் கூறினார் என்பது செய்தி.
ஆன்மீகமும், விஞ்ஞானமும் ஒரே பாதையில் பயணம் செய்ய முடியாது என்று விஞ்ஞானி அப்துல் கலாமுக்குத் தெரியாதா?
ஆனால் நிலைமையைப் பார்த்தீர்களா? ஆன்மீகம் என்றாலும் அவர்கள் காட்டில் மழைதான் - விஞ்ஞானம் என்றாலும் அவர்கள் காட்டில் மழையோ மழைதான்! சங்கர மடமும், காமாட்சி கோவிலும், ஏகாம்பரேசுவரர் ஆலயமும் என்று ஒரு நீண்ட பட்டியலே இருக்க, இங்கு என்ன வளத்துக்குப் பஞ்சம் - இங்கு என்ன வசதிக்குக் கேடு - எதற்கு இந்த ஏற்பாடுகள் எல்லாம் என்று சொல்லும் துணிச்சல் சங்கராச்சாரியாருக்குக் கிடையாது!
ஆன்மீகத்துக்குமுன் விஞ்ஞானமெல்லாம் ஒரு பொருட்டா என்று கேட்கும் வீரம் அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது.
காரணம், விஞ்ஞான வசதிகளை சங்கரமடமும்,
அவாளும் அனுபவிப்பது போல - வேறு யாராலும் அனுபவிக்க முடியாது! பழைய காலத்தைப்போல காஞ்சி சங்கராச்சாரியார் என்ன கால்நடையாகவா பயணம் செய்துகொண்டிருக்கிறார்?
அதிநவீன சொகுசு காரில்தானே சவாரி செய்கிறார்.
கடலைத் தாண்டிப் போகக்கூடாது என்கிற இந்துமத சம்பிரதாயங்களையெல்லாம் காலில் போட்டு மிதித்துவிட்டு சீனாவுக்கு விமானத்தில் பறக்கப் போகிறாரே!
பேசுவது ஆன்மீகம்
- அனுபவிப்பது எல்லாம் அதற்கு எதிரான விஞ்ஞானம்!
பேச நா இரண்டுடையாய்ப் போற்றி என்று ஆரியத்தைப்பற்றி காஞ்சியில் பிறந்த அண்ணா வருணிக்கவில்லையா - அது காஞ்சி மடத்துக்கும் பொருந்தும் தானே! எத்தனையோ நகரங்களும்,
கிராமப்புறங்களும் அடிப்படை வசதிகளின்றி பரிதவித்துக் கிடக்க, காஞ்சி நகரத்துக்கு மட்டும் என்ன இப்படி ஓர் ஏற்பாடு? புரிகிறதா எல்லாம் அவாளுக்கே வெளிச்சம்.
விடுதலை ஒற்றைப்பத்தி - 1,
7.2.2002
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக