ஆரியருக்குச் சமயம் என்பது ஒரு குறிப்பிட்ட கொள்கை கொண்ட சாதனம்
ஒன்றுமில்லை என்பது யாவரும் அறிந்ததேயாகும் என்பது ஒருபுறமிருக்க ஆரிய சமயம்
இந்துமதம் என்று சொல்லப் படுமானாலும், இந்து மதம் என்பதற்கும் ஒரு
குறிப்பிட்ட கிளிப்த்தமான கொள்கையோ ஆதாரமோ கிடையாது என்பது ஆராய்ச்சியாளர்
கடைமுடிவாகும். ஆரியத் தந்திரசாலிகளும் ஆரியரல்லாதார் மீது துவேஷம் கொண்டவர்களும்
அனாரியர்களை இழிவுபடுத்தியும், அடக்கியும் ஏமாற்றியும் கீழ்மைப்படுத்துவதற்கு ஆதாரமாக அவ்வப்போது
சொல்லி வந்ததையும், எழுதி வந்ததையும் தொகுத்துக் கால தேச வர்த்தமானத்திற்கு ஏற்றபடித்
திருத்தியும், சில விஷயங்களை எடுத்தும், சில விசயங்களைப் புகுத்தியும் அமைத்துக்
கொண்டிருக்கும் ஆதாரங்கள் இன்று ஆரியர்களின் சமய ஆதாரங்களாய் இருக்கின்றன. அவை
பெரிதும் வேதம், சாஸ்திரம், சுருதி, ஸ்மிருதி, புராணம்
இதிகாசம் முதலிய பெயர்களோடு இருந்தாலும், இவைகளில் பல ஒன்றுக்கொன்று
சம்பந்தமில்லாமலும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாயும் ஆபாசங்களும் அசம்பாவிதங்களும்
அசாத்தியங்களும் நிறைந்ததாயும், புத்திக்கும் ஆராய்ச்சிக்கும் பகுத்தறிவுக்கும் பொருந்தாததாயும்
பெரிதும் இருந்து வருவதைக் காணலாம்.
இந்தக் காரணத்தாலேயேதான் ஆரியர்கள் தவிர மற்றவர்கள் அவைகளைப்
படிக்கக்கூடாது என்றும், படித்தால் கொடிய தண்டனைகள் விதிக்க வேண்டும் என்றும், அவ்வாதாரங்களை
எவனாவது படித்துவிட்டோ, கேட்டு விட்டோ விவகாரம் தர்க்கம் செய்வானானாலும் நம்பாவிட்டாலும்
அவனை நாஸ்திகன் என்று சொல்லி அரசன் தண்டித்துச் சமுதாயத்தை விட்டும், நாட்டை விட்டும்
விரட்டி அடிக்க வேண்டும் என்றும் எழுதி வைத்துக் கொண்டார்கள். இப்படிப்பட்ட
நிபந்தனைகளும் தண்டனைகளும் அதை நிறைவேற்றத்தக்க அரசர்களும் வெகு காலம் வரை இருந்து
வந்ததாலேயே அப்படிப்பட்ட ஆபாச அக்கிரம அவிவேகமான அவர்களது சமய ஆதாரங்கள் திராவிட
மக்களுக்குள் பரப்பப்படவும் அதனால் ஆரியர்களுக்கு மேன்மையும், செல்வாக்கும்
பெருகி நிலைத்து வரவும் இடமேற்பட்டதுடன், ஆரியரல்லாத மக்கள் எவ்வளவு
பண்டிதர்களானாலும் அந்த ஆரியர் சமய ஆதாரங்களைப் பிரச்சாரம் செய்வதனால் மாத்திரமே
வாழ முடியும்படியாகவும் இருந்து வந்திருக்கிறது.
(நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர்
பண்பாடு - தந்தை பெரியார்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக