வியாழன், 3 ஆகஸ்ட், 2017

நற்சான்றாம்!



பாரதீய ஜனதா கட்சி மற்றும் சங் பரிவார்க் கூட்டத்தின் நடவடிக்கைகளை வைத்து கலாச்சார தீவிரவாதிகள் என்று காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி வருணித்தார்.

இதற்காகப் பெருமைப்படுவதாக தமிழக பா... பொதுச்செயலாளர் திருவாளர் இல.கணேசன் அய்யர்வாள் புளகாங்கிதம் அடைந்துள்ளார். இது தங்களுக்குக் கிடைத்திட்ட நற்சான்றிதழ் என்றும் கூறியிருக்கிறார்.

இதுவரை மதவாதிகள், வகுப்புவாதிகள் என்றெல்லாம் தவறாகப் பிரச்சாரம் செய்தவர்கள் இப்பொழுது கலாச்சார தீவிரவாதிகள் என்று குறிப்பிட்டிருப்பது பெருமைக்குரியதாம்.

பா...வினரோ - சங்பரிவார்க் கும்பலோ கலாச்சாரம் என்று சொல்லுவது இந்துக் கலாச்சாரத்தைத்தான்! இந்த நாட்டில் இருப்பது ஒரே ஒரு கலாச்சாரம் - அது இந்துக் கலாச்சாரம் - மற்ற சிறுபான்மையினரும் இந்தக் கலாச்சாரத்தைத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்; முஸ்லிம்கள் உட்பட இராமனையும், கிருஷ்ணனையும்தான் கடவுள்களாக ஏற்றுக் கொள்ளவேண்டும். அவர்கள் எந்த உரிமையையும் கோரக்கூடாது. குடிமக்கள் உரிமையுமின்றி வாழ முன்வரவேண்டும் என்று சொல்லுவது கலாச்சாரத்தின் பெயரால் திணிக்கப்படும் தீவிரவாதம்தான். சங்பரிவார்க் கும்பலின் மதவாதம், வகுப்புவாதம் என்பதும் இதேதான்! இரண்டும் ஒன்றேதான்! சொல்லில்தான் வேறுபாடு!

ஏதோ சாமர்த்தியமாகப் பதில் சொல்லுவதாக நினைத்துக் கொண்டு கணேசன் வாள் திருவாய் மலர்ந்துள்ளார்.

எப்படியோ !!! உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார் - தாங்கள் கலாச்சார தீவிரவாதிகள் என்பதை!

அந்தக் கலாச்சார தீவிரவாதம்தான் தொண்டூழியம் செய்ய வந்த ஸ்டெயின்ஸ் பாதிரியாரையும், அவர்தம் இரு செல்வங்களையும் தீயிட்டுப் பொசுக்கியது. அந்தக் கலாச்சார தீவிரவாதம்தான் மத்திய பிரதேசத்தில் கன்னிகாஸ்திரீகளைக் கற்பழித்தது. அந்தக் கலாச்சார தீவிரவாதம்தான் குஜராத்தில் டாங்ஸ் மாவட்டத்தில் கிறித்துவப் பள்ளிகளை இடித்துத் தரைமட்டமாக்கியது; பைபிள்களைக் கொளுத்தியது.

உண்மையை ஒப்புக் கொண்டதற்காக ஒரு வகையில் இல.கணேசனைப் பாராட்டுகிறோம்.


விடுதலை ஒற்றைப்பத்தி - 1, 8.3.2000

நூல் :  ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...