கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் பிறந்த நாள் (1908) இன்று!
என்.எஸ்.கே.
வெறும் நாடக நடிகர் அல்லர் - பிழைப்பு நடத்திய சினிமா நடிகருமல்லர்!
சீர்திருத்தச் செம்மல்! கலையைக் கருத்தூன்றும் கருவியாகப் பயன்படுத்திய தந்தை பெரியாரின் சீடர்.
பூம்பாவை என்னும் திரைப்படம்.
திருஞானசம்பந்தன் பார்வதி தேவியாரிடம் ஞானப்பால் உண்டு சின்ன வயதிலேயே தேவாரம் பாடினார் என்று கதை அளப்பார்கள் அல்லவா - அதைப்பற்றி ஒரு பாட்டு:
சின்ன வயதிலே கன்னித் தமிழிலே
சொன்னான் ஒரு பாட்டு
என்று போடுறாயே வேட்டு!
கல்வி கற்றுத் தேறா முன்னம்
கவி எழுதிட வருமா?
கட்டுக் கதைகளை விட்டுத் தள்ளு
குட்டு வெளிப்படுமே
என்று பாடுவார்.
கலைவாணரின் கருத்தை அறிந்து பாடல் இயற்றும் பொருத்தமான கவிராயராக விளங்கியவர் உடுமலை நாராயண கவி!
இந்த இரட்டையர்களின் சாதனை சாதாரணமானதல்ல!
சாலி வாகனன் திரைப்படத்திலே ஜாதியைப்பற்றி ஒரு காட்சி! தாழ்த்தப்பட்ட ஜாதி என்றால் இளக்காரமா? அவன் எப்படி தாழ்த்தப்பட்டவன்? எதில் தாழ்த்தப்பட்டவன் என்று உயர் ஜாதிக்காரனைப் பார்த்துக் கேட்பார்.
உப்புக் கரிக்கிறது
மிளகா உறைக்கிறது
தண்ணீர் குடித்தால்
நெஞ்சு அடைக்கவில்லை
சந்தேகமிருந்தா
சாப்பிட்டுப் பாருங்கோ
சமையல் ரெடியாகயிருக்கு - என்பார்.
தாழ்த்தப்பட்டவன் வீட்டு உப்பும், மிளகாயும் வேறா என்று கேட்கும் அந்தக் கேள்வியும், அதைச் சொல்லும் பாணியும் கலைவாணருக்கே உரியது.
இந்தக் காட்சியைத் திரையில் பார்க்கும் எவருக்கும் சுள்ளென்று மிளகாய் போல உறைக்கத்தானே செய்யும்? சிந்தனை நரம்புகள் புடைக்கத்தானே செய்யும்?
ஆட்டம் ஆடியும்,
வழுக்கி விழுந்தும், அதிகப்படியாகச் சேட்டைகள் செய்தும் மக்களைச் சிரிக்கச் செய்த கோமாளிகளின் போக்குக்கு விடை கொடுத்து, சிந்தனைக் கணைகளை எறிந்து அறிவு அலைகளை எழுப்பி விலாநோக வாய்விட்டுச் சிரிக்கச் செய்து சிந்திக்க வைத்த கலைவாணர் என்.எஸ்.கே. காலம் தந்த அருங்கொடையல்லவா?
விடுதலை ஒற்றைப்பத்தி - 1,
29.11.1999
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக