நவம்பர் 26 (1949) என்று சொன்னால் இந்திய அரசியல் சட்டம் உருவாக்கம் பற்றி நினைவுக்கு வரும்!
அத்தோடு இன்னொன்றும் நினைவுக்கு வரவேண்டுமே!
அதே நவம்பர் 26-இல் (1957) தான் ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டப் பகுதியைக் கொளுத்தும் போராட்டத்தை திராவிடர் கழகம் நடத்திய நாள்!
நாடு சுதந்திரம் அடைந்து விட்டதாம்.
ஆனால்,
மனித சுதந்திரத்தின் முதல் எதிரியான ஜாதி அமைப்புக்கு அந்த சுதந்திர நாட்டு அரசியல் சட்டத்தில் பாதுகாப்பாம்! வாயால் சிரிக்க முடியவில்லை அல்லவா?
மண்ணுக்குச் சுதந்திரமா?
மனிதனுக்குச் சுதந்திரமா? என்ற மானுட உரிமைக் குரலை மலைகளும் குலுங்க எழுப்பிய மாபெரும் தலைவர்தான் தந்தை பெரியார்.
ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டத்துக்கு வையுங்கள் தீயை என்று கட்டளையிட்டார்.
அரசோ அவசர அவசரமாகச் சட்டத்தைக் கொண்டு வந்தது! மூன்றாண்டுகள்வரை கடுங்காவல் தண்டனை என்று அச்சுறுத்தியது. இந்த அரசியல் சட்டத்தின்கீழ் சூத்திரனாக
- பார்ப்பானின் வைப்பாட்டி மகனாக வாழ்வதைவிட அதனை எரித்து, சிறைச்சாலை செல்லத் தயார் என்று கருஞ்சட்டை இலட்சியச் சேனை பொங்கி எழுந்தது!
இவ்வளவுக்கும் இந்திய அரசியல் சட்டம் என்று வெறும் காகிதத்தில் எழுதி - அதைக் கொளுத்தியதற்காக மூவாயிரம் திராவிடர் கழகத் தோழர்கள் வெஞ்சிறை ஏகினார்கள். 16 பேர்களை சிறையில் பலி கொடுத்தோம்!
இந்நாளை ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு வீர வணக்க நாள் என்று அறிவித்தார் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.
அம் மாவீர மாணிக்கச் சுடர்களுக்கு,
கருப்பு மெழுகுவர்த்திகளுக்கு மரியாதை கலந்த வீர வணக்கத்தை உரித்தாக்குகின்றோம்!
இன்னும் இந்திய அரசியல் சட்டத்தில் மதச் சுதந்திர உரிமை (25, 26-ஆவது பிரிவுகள்)
என்ற பெயரில் ஜாதிக்குக் காவல் அரண் கட்டப்பட்டுள்ளது.
அவற்றை உடைத்தெறியும் நாளே - அந்த வீரர்களுக்கு உண்மையாகச் செலுத்தப்படும் நன்றிக் கடன்!
ஏப்ரல் 1-இல் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக உரிமை கோரி திருவாரூரில் திராவிடர் கழகம் நடத்தும் போராட்டம்
- அதன் வெற்றி - புதிய அத்தியாயத்தை உருவாக்கும்! அதற்குத் தயாராவோம்!
வாழ்க பெரியார்!
விடுதலை ஒற்றைப்பத்தி - 1,
26.11.1999
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக