புதன், 2 ஆகஸ்ட், 2017

குமாரப்பாளையம்!


நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம் தமிழ்நாட்டுக்கே வழிகாட்டும் ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.

குமாரப்பாளையம் திராவிடர் கழகத்தவர் ஒவ்வொரு வீட்டிலும் விடுதலை,  உண்மை - உண்டியல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் தேநீர் குடிக்கும் செலவைக் குறைத்து அந்தக் காசை அந்த உண்டியலில் போட்டுச் சேர்த்து அதைக் கொண்டு விடுதலை  வாங்குவது என்பதுதான் அந்தத் திட்டம்!

மேலும், பொதுவான முக்கியக் கடைகளில் விடுதலை  ஏட்டைப் போட்டு, அந்தக் கடைக்காரர்களிடம் ரூ.1.25 மட்டுமே பெற்றுக்கொண்டு, மீதி ஒரு ரூபாயை திராவிடர் கழக இளைஞரணி அமைப்பே ஏற்றுக்கொள்வது; அதை ஈடுகட்ட தெருமுனைப் பிரச்சாரம் செய்து அதன்மூலம் வசூலிப்பது என்பதுதான் அந்தத் திட்டம்!

விடுதலையின் அருமையை உணர்ந்த தோழர்கள், அதுதான் தனி மனித வாழ்வுக்கும், சமுதாயத்துக்கும் விடுதலையை அளிக்கவல்ல மூச்சுக்காற்று என்பதை மூளையைக் கசக்கி இப்படி ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்திய பாங்கு சாதாரணமானதல்ல!

இதில் அடங்கி இருப்பது வெறும் ரூபாய் - பைசா என்பதல்ல! ஆழ்ந்த சமுதாய உணர்வின் உச்சமும், எல்லையும் எத்தகையது என்பதுதான் மதிக்கப்பட வேண்டியதாகும்!

ஒடுக்கப்பட்ட மக்களின் உன்னத எழுச்சியை விளக்குவதாகும்! மக்கள் தொகையில் சரி பகுதியினரான பெண்குலத்தின் புத்துணர்வை வெளிப்படுத்துவதாகும்!

தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் கணிப்புப்படி தமிழன் இல்லம் என்பதன் அடையாளமே விடுதலை  அங்கு இருப்பதுதான்.
வீட்டுக்கு வீடு விடுதலை வீட்டுக்கு வீடு தந்தை பெரியார் படம் என்பதுதான் தமிழர் சமுதாயம் மானமும், அறிவும் பெறுவதற்கான வழிமுறைகளாகும்.

அந்த வகையில் குமாரப்பாளையம் ஒரு ஒளிக்கீற்றைக் காட்டியிருக்கிறது. அவரவர்களும் அவரவர் சிந்தனைக்குப் பயிற்சி அளித்து புத்தம் புது பாட்டைகளை உருவாக்குவார்களாக!

கடந்த நூற்றாண்டில் ஈரோட்டில் தோன்றிய சூரியனின் ஒளிக்கதிர் வீச்சுமூலம் இந்நூற்றாண்டின் இறுதி ஆண்டுக்குள்ளாவது (2000) எல்லாவிதமான இருளையும் மிச்சசொச்சமின்றித் துடைத்தெறிய வழிவகை காண்போம்!

விடுதலை  என்ற பே(போ)ராயுதம் நம்மிடம் இருக்கிறது. அதைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது தமிழர்களின் கடன்

பயன்பட வைப்பது கழகத் தோழர்களின் கடன்!! அதைச் செய்து முடிப்போம் உடன்!!!

குமாரப்பாளையத்துக்கு மீண்டும் பாராட்டு!


விடுதலை ஒற்றைப்பத்தி - 1, 12.12.1999

நூல் :  ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...