செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

தமிழனது நாடு இன்று தமிழ்நாடு


இதோ, இந்த இந்திய சரித்திரப் புத்தகத்தைப் பாருங்கள், முதல் போர் என்ற தலைப்பில், கந்தபுராணம் ஆரியர் திராவிடர் சண்டையைச் சித்தரித்து எழுதிய கதையாகும் என்றும், ஆரியர் திராவிடர் முதல் போரானது சிவனார் என்கின்ற இமயமலையில் இருந்த ஒருவர், தனது மகன் சுப்பிரமணியன் என்பவனை இலங்கைக்கு நெடுந்தூரத்தில் இருந்த ஒரு தீவில் இருந்த ஒரு சூரன் என்பவனுடனும், அவன் தம்பி தாரகன் என்பவனோடும் சண்டை செய்யச் செய்தார் என்றும், சுப்பிரமணியன் வேல் முதலிய ஆயுதங்களால் வெற்றிபெற்றான் என்றும் எழுதி இருப்பதைப் பாருங்கள்.

அதற்கு அடுத்தாற்போல் இராமாயணப் போரைப்பற்றியும் இதே மாதிரி எழுதியிருக்கிறது. ராமன் என்பவன் ராவணன் என்பவனை வெற்றி கொண்டானாம். இவற்றால் கடைசியாகத் தென்பாகந்தான் மீதியாகித் தாங்கள் திராவிடரென்றும், தமிழரென்றும் தங்கள் நாடு திராவிட நாடென்றும் அறிந்த மக்கள் இன்னமும் சிலர் இருக்கிறார்கள்; இந்தச் சிறுபாகம்தான் இன்று திராவிட நாட்டையும்திராவிட மக்களையும் நினைவூட்ட அடையாளமாக இருக்கிறது. ஆனால், நாம்தான், நம்மைப் பற்றிய சரித்திரமும், யோக்கியதையும் அறியாமல் நாம் எதிரிகளைக் குருமார்களாகவும், தலைவர்களாகவும், கடவுள்களாகவும் கருதிக் கொண்டு, நமக்கும் நம் நாட்டுக்கும் எதிரிகளாயிருந்தவர்கள் இருப்பவர்கள் பெயரைச் சொல்லிக் கொண்டு ஈனத்தனமாய் நடந்துகொண்டு வருகிறோம். அதாவது நம்நாட்டுக்குப் பெயர் பாரதநாடு என்றும், நமக்குப் பெயர் பாரத மக்கள் என்றும் சொல்லிக் கொள்ளுகிறோம். இது நம் எதிரிகள் வைத்துக்கொண்ட பெயராகும்.

இப்படிப்பட்ட மூடமக்கள், உலகில் வேறு எங்கும் இருக்கமாட்டார்கள். இன்று கூட இவைகளையெல்லாம் படித்தும் தெரிந்தும் உள்ள மக்கள் ஆகிய தமிழர்கள் தங்கள் நாட்டைப் பற்றியோ, சமுதாயத்தைப் பற்றியோ மொழியைப் பற்றியோ, மானத்தைப் பற்றியோ போதிய கவலை இல்லாமல் பெரிய தேசாபிமானிகள் போல் நடக்கிறார்கள்.

மனிதர்களுக்கு முன்னேற்ற உணர்ச்சி, சுதந்திர உணர்ச்சி வேண்டுமானால், அவர்களுக்குத் தங்கள் நாடு, சமுதாயம், மொழி, கலை முதலிய உணர்ச்சி இருந்தால்தான் ஏற்படும். அவை ஒன்றும் தமிழனுக்கு இல்லை. தமிழனது நாடு இன்று தமிழ்நாடு ஆகும். தமிழனது சமுதாயம், தமிழர் சமுதாயமாகும். தமிழனது மொழி தமிழாகும். அப்படி இருக்கத் தமிழ்நாடு என்பது இன்று சித்திரத்தில் இல்லாமல் செய்யப்பட்டாய் விட்டது. தமிழ் நாளுக்கு நாள் மறைந்துகொண்டே வருகிறது. தமிழர் சமுதாயமோ அடியோடு ஆரியமயமாகி வருகிறது.

நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு 

ஆசிரியர் : தந்தை பெரியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...