புதன், 2 ஆகஸ்ட், 2017

செம்மங்குடிகள்!


வாஸ்து சாஸ்திரம் என்ற ஒரு கரடியைச் சமீப காலத்தில் மிக அதிகமாக அவிழ்த்து விட்டு வருகிறார்கள். அது பற்றி விளம்பரங்கள் அதிகம்! ஒரு பக்கத்தில் விளம்பரம் செய்து, இன்னொரு பக்கத்தில் வியாபாரம் ஆக்கிக் கொள்ளும் சூழ்ச்சியைச் செய்து வருகிறார்கள்.

7-12-1999 நாளிட்ட இந்து ஏட்டின் 3ஆம் பக்கத்தில் ஒரு தகவல் (Reporter’s Diary) வெளிவந்துள்ளது.

இசை விழா ஒன்றில் கலந்துகொண்ட திருவாளர் செம்மங்குடி சீனிவாச அய்யர்வாள் அந்த விழாவுக்குச் சம்பந்தமில்லாமல், இடுக்கோடு இடுக்காக கந்தப் பொடியைத் தூவியுள்ளார்.
ஒரிசாவில் கடும் புயல் வீசினாலும் அங்குள்ள கோவிலுக்குச் சேதாரம் ஏற்படவில்லை; காரணம், அவை வாஸ்து சாஸ்திரத்தில் கட்டப்பட்டதுதான் என்று கூறி இருக்கிறார்.

அதே ஒரிசா கோவிலின் தேர் சமீபத்தில் தீப்பிடித்து எரியவில்லையா? வாஸ்து சாத்திரப்படி கட்டப்பட்ட சிறீரங்கம் கோவில் எவ்வளவுப் பெரிய தீ விபத்துக்கு ஆளானது. இப்பொழுது கட்டப்பட்டுள்ள ராஜகோபுரத்திலும்கூட பெரும் கீறல் விழுந்துள்ளதே - அதற்கு என்ன சமாதானம்?

அருணாசல ஈஸ்வரர் குடிகொண்டுள்ளதாகக் கூறப்படும் திருவண்ணாமலைக் கோவில் இடிந்து, மீண்டும் செப்பனிடப்படவில்லையா?

பார்ப்பனர்கள் எந்தச் சந்தர்ப்பம் கிடைத்தாலும் மூடநம்பிக்கைச் சமாச்சாரங்களை தம் சுருக்குப் பையிலிருந்து அவிழ்த்துக் கொட்டி மக்கள் மத்தியில் புழங்கவிடச் செய்வதில் மிகக் கவனமாகவே இருப்பார்கள்.
ஏன்? மக்களிடத்தில் எவ்வளவுக் காலத்துக்கு இந்த மூட நம்பிக்கை இருட்டு கெட்டியாக கவ்விப் பிடித்திருக்கிறதோ - அவ்வளவுக் காலத்துக்குத்தான் பார்ப்பனர்களின் உயர்ஜாதித்தனம் பலிக்கும்  - மூட நம்பிக்கை வளர்ந்தால்தான் மக்களை அவர்களால் சுரண்டவும் முடியும். இந்தக் காரியத்தை ஒரு திருப்பணியாகக் கருதி எந்தத் துறையில் உள்ள பார்ப்பனர்களும் அதில் ஈடுபடுவது என்பதை - தான் பிறவி எடுத்ததன் பலன் என்றே கருதுகிறார்கள். அதைத்தான் பாடகர் திருவாளர் செம்மங்குடி சீனிவாச அய்யர்வாளும் செய்திருக்கிறார்.

வாஸ்து சாத்திரப்படி கட்டப்பட்ட அந்தக் காலத்து வீடுகளில், நிலைக்கால் உயரமே வெறும் அய்ந்து அடிக்குள்தானே!

6 அடி மனிதன் நிலையில் முட்டிக்கொண்டு - நிலை இடிக்கிறது என்றுதானே சொன்னான்? நிலை இவனை இடித்ததா, இவன் நிலையை இடித்தானா? அதுமட்டுமல்ல - அப்படி நடந்தது ஏதோ அபசகுணம் என்றல்லவா நம்பி, புறப்பட்ட வேலைக்குச் செல்லாமல், வீட்டுக்குள் முடங்கி காலத்தை வீணடித்தான்!

லவுகிக வாழ்வில் திளைக்கும் செம்மங்குடிகள், மற்றவர்களுக்கு மட்டும் வைதீகங்களைப்பற்றி அவிழ்த்துக் கொட்டுவதில் குறைச்சல் இல்லை!


விடுதலை ஒற்றைப்பத்தி - 1, 10.12.1999

நூல் :  ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...