புதன், 2 ஆகஸ்ட், 2017

ராம பக்தர்கள்


அயோத்தியில் ஒரு புதிய பிரச்சினை! பொதுமக்கள் விழி பிதுங்குகிறார்கள்!! தண்ணீர்த் தொட்டிகளில் கனமான இரும்பு மூடிகளைப் பொருத்து கிறார்கள். தொலைக்காட்சி ஆன்டனாவைச் சுற்றி முள்வேலி அமைக்கிறார்கள். சமையலறையில் உள்ள ஜன்னல்களுக்கு வெளியே பாதுகாப்புக்காக தடிமனான கம்பிகளை வைக்கிறார்கள். எதற்காக இந்த ஏற்பாடுகள் எல்லாம்? ஸ்ரீ ராமப் பக்தர்கள் அதாவது வானரர்கள் (குரங்குகள்) திடீர் படையெடுப்புத்தான் இதற்குக் காரணமாம்!

ஏன் இந்தத் திடீர்த் தாக்குதலாம்?

அயோத்தியில் விசுவ இந்துபரிஷத் சாமியார் கூட்டம் எந்த நேரத்திலும் கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டு விடுவார்கள் என்று அந்த இடத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளதால் பக்தர்கள் வருவது குறைந்துவிட்டதாம் - இதனால் புற்றீசல்போலப் புழுத்துக் கிடந்த கடைகளில் வியாபாரம் மந்தமாம். இதனால் பக்தர்கள் மூலம் குரங்குகளுக்குக் கிடைத்து வந்த பழம் முதலிய தீனிகள் கிடைக்காமற் போனதால் இந்த வானரக் கூட்டம் வயிற்றுப் பாட்டுக்காக ஊருக்குள் புகுந்து கைவரிசை காட்ட ஆரம்பித்துவிட்டனவாம். வீட்டில் ஒரு பொருளை வைக்க முடிவதில்லையாம் - வீட்டுக்குள் புகுந்து தூக்கிக் கொண்டு ஓடிவிடுகின்றனவாம் - அதற்காகத்தான் வீடுகளில் இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளாம்.

அயோத்தியோ ராமன் ஜென்மப் பூமி! குரங்குகளோ அதாவது அனுமார்களோ ராமனின் பக்தகோடிகள்! ராமன் லங்காபுரியை அடைவதற்குக் கடலில் பாலம் போட்டுக் கொடுத்தவை! சீதையிடத்தில் ராமன் சார்பாகத் தூது போனவன்கூட அனுமான்தான்! அத்தகைய ராம பக்த கே()டிகளைப் பக்தர்கள் அவமதிக்கலாமா? அதுவும் ராமன் பிறந்ததாக அத்வானியும், அசோக்சிங்காலும், திராவிட இயக்கத்திலிருந்து புதிதாகப் போய்ச் சேர்ந்த திருநாவுக்கரசர்களும் நம்பும் அயோத்தி வாழ்மக்கள் குரங்குகள் என்று கேவலப்படுத்தலாமா?

தாராளமாகக் கதவுகளை திறந்து வைத்து, அவை சாப்பிடுவதை அழகு பார்த்து ரசிக்க வேண்டாமா - அப்பொழுதுதானே போற கெதிக்கு நற்கெதி கிடைக்கும்! எங்கெல்லாம் ராமாயண உபந்நியாசங்கள் நடக்கின்றனவோ அங்கெல்லாம் இப்பொழுதும்கூட அனுமான் பிரசன்னமாக இருப்பான் என்பது அய்தீகம் அல்லவா? அநியாயமாக அயோத்தி மக்கள், ரௌரவாதி நரகத்திற்குச் செல்ல வேண்டாம் என்பது ராமப் பக்தர்களின் வேண்டுகோள்!


விடுதலை ஒற்றைப்பத்தி - 1, 12.2.2002


நூல் :  ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...