போதை என்பது பொதுவாக மனிதனின் மூளை செயல்பாட்டை முடக்குவதாகும். கடவுள் போதை,
மதப் போதை, பக்திப் போதை என்பதெல்லாம் இந்த வகையைச் சேர்ந்ததுதான்.
இதில் குடிப்போதை என்பதும் ஒன்று! குடிப்பழக்கம் உலகம் முழுமையும் உள்ள ஒன்றுதான். நம் நாட்டைப் பொறுத்தவரை எதிலும் அத்துமீறல்! குடி குடியைக் கெடுக்கும் என்பது வெறும் அடுக்கு மொழியல்ல - நிதர்சனம் - நடைமுறை உண்மையாகும்.
அதுவும் கிக் ஏறுவதற்கென்று எத்தனை எத்தனைக் கலப்படம் -
அதனால் அந்தக் குடிமகனின் உடலும்அல்லவா கெடுகிறது
- சாவூருக்குச் சீக்கிரம் கொண்டு போய்ச் சேர்க்கிறது!
குடியும் குடித்தனமுமாக வாழு! என்று சொன்னதை இவர்கள் வேறு வகைகளில் எடுத்துக் கொண்டு விட்டார்களோ! போதைகளில் எத்தனை எத்தனை வகைகளோ! பள்ளி,
கல்லூரி மாணவர்களைப் பாடாய்ப் படுத்தும் போதைப் பழக்கம்! தொழிலாளர்களில் நூற்றுக்கு
90 பேர் கன்னங்களில் ஆனந்த நடமாடும் பான்பராக்!
பான்பராக்கால் வரும் கேடுபற்றி அண்மைக் காலத்தில் பல தகவல்கள் வெளிவந்து கொண்டுதானிருக்கின்றன.
வாய்ப் புற்று நோய்க்கு அது முக்கிய கரணியம் என்ற ஆதாரப் பூர்வமாக வெளிவந்தும் கூட அதனைப் பொருட்படுத்துவதில்லையே!
சிகரெட்டும் ஒரு போதைதான். குளிர்பானம் என்கிற பெயரில் கொக்கோ கோலாவையும், பெப்சியையும் வாங்கிக் குடிப்பது என்பது ஒரு நாகரிக போதைதான்!நீரே - உணவு - மருந்து! மனிதன் நாள் ஒன்றுக்குக் குடிக்கவேண்டிய அளவுக்கு நீரைப் பருகுவதில்லை. இதன் காரணமாக கூட பல நோய்கள் - தொல்லைகள்! தண்ணீரைப் பருகு - போதையை உதறு என்கிற முழக்கம் நாடெங்கும் கேட்கட்டும்!
விடுதலை, 26.06.2001
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக