ஜஸ்டிஸ் கட்சியின் சார்பில் வாரம் இருமுறை ஏடாக
1-6-1935 அன்று முகிழ்த்தது. அன்று அதன் விலை அரையணா. அதன் முதல் ஆசிரியர் டி.ஏ.வி.நாதன். 1-1-1937 முதல் பண்டித எஸ்.முத்துசாமி பிள்ளை அவர்களை ஆசிரியராகக் கொண்டு நாளேடாக மலர்ச்சி பெற்றது. அப்பொழுது அதன் விலை காலணா.
டி.ஏ.வி.நாதன்,
பண்டித எஸ்.முத்துசாமி பிள்ளை, அறிஞர் அண்ணா, சாமி சிதம்பரனார்,
அ.பொன்னம்பலனார்,
குத்தூசி குருசாமி, அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார்,
கி.வீரமணி ஆகியோர் விடுதலையின் ஆசிரியர்கள் என்ற பெருமைக்குரியவர்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக தந்தை பெரியார்தான் அதன் ஆசானும், புரவலருமாவார். அதன் தத்துவக் கர்த்தாவும் அவர்களே! தமிழர் வாழ்வுரிமைக்காக விடுதலை சந்தித்த களங்கள், பெற்ற விழுப்புண்கள், வெற்றி மகுடங்கள் ஒன்றா - இரண்டா? தமிழர் தம் முகவரியாகவே அது இன்றுவரை நிலை கொண்டுள்ளது! 24 மணி நேரமும் தூங்காத தொண்டறத்தின் தூய வெளிச்சம் அது!
பகுத்தறிவுத் துறையில் அது அமைத்துக் கொடுத்த பாதைதான் -
இந்தியத் துணைக் கண்டத்திலேயே தமிழ்நாடு சமுதாய மறுமலர்ச்சித் திசையின் கலங்கரை விளக்கமாக ஒளிவீசுவதற்குக் காரணம்
- பெண்ணுரிமையின் தளகர்த்தமும் விடுதலையே!
விடுதலையிடம் சவுக்கடி படாத பழைமைகள் பிற்போக்குத் தனங்கள் கிடையவே கிடையாது!
அது அரசியல் ஏடல்லதான்! அதேநேரத்தில் அரசியலை அது வழிநடத்தியதுண்டு
- ஆட்சிகளை மாற்றும் லகான் அதன் கையில் இருந்திருக்கிறது! விடுதலையில் இன்று வரும் செய்தி - கருத்து
- மறுநாள் ஆணைகளாக மறுவடிவம் பெற்றதுண்டு. அதனால்தான் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் அவருக்கே உரித்தான வகையில் நறுக்குத் தெறித்ததுபோலப் படம் பிடித்துக் காட்டினார்.
தமிழர்களே, உங்கள் மூச்சுக் காற்றான விடுதலையை (சு)வாசிக்கத் தவறாதீர்கள்!
விடுதலை, 1.6.2001
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக