விஜய் தொலைக்காட்சியில் ஒரு சரடு! பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை என்றால் மிகவும் பிடிக்குமாம். கொழுக்கட்டையை நல்லா மூக்குப் பிடிக்கத் தின்றுவிட்டு, எலி வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம்.
அப்பொழுது பாம்பு ஒன்று குறுக்கே போக எலி பயந்து பாய்ந்து ஓடியதாம். அதனால் பிள்ளையார் சாமி பல்டி அடித்து வயிறு கிழிந்து கொழுக்கட்டையெல்லாம் வெளியே விழுந்துவிட்டதாம். பிள்ளையார் அந்தக் கொழுக்கட்டைகளையெல்லாம் எடுத்து வயிற்றுக்குள் வைத்துவிட்டு,
அந்த பாம்பை எடுத்து வயிற்றில் சுற்றிக்கொண்டு விட்டாராம். பிள்ளையார் வயிற்றைச் சுற்றி பாம்பு இருப்பதை இப்பொழுதும் பார்க்கலாம் என்று ஒரு கதையை விஜய் தொலைக்காட்சி அளந்து கொட்டியது:
எலி என்றால் சாதாரணமானதா? பிள்ளையாரின் வாகனம் அல்லவா? அதற்கென்று ஒரு சக்தி இருக்க வேண்டாமா? எலியே பயந்து ஓடினாலும், எல்லாக் கடவுளுக்கும் மேலானவரான (விநாயகன் என்றால் தலைவராம்) சக்தி படைத்தவரான பிள்ளையார் அந்தர் பல்டி அடிக்கலாமா?
அவர் வயிற்றிலிருந்து கொழுக்கட்டைகள் பொத்துக் கொண்டு குதிக்கலாமா?
கடவுள் ஒருவர்
- அவர் அரூபி (உருவமற்றவர்) என்று இன்னொரு பக்கம் உலக ஞானம் பேசுவார்கள்.
ஆயிரம் ஆயிரம் கடவுள்கள்
- ஆயிரம் ஆயிரம் ரூபங்கள் -
பிள்ளையார் போன்ற ஒரு கடவுளுக்கேகூட நூற்றுக்கணக்கான விசித்திர வடிவங்கள்
- என்ன முடியை பிய்த்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறதா?
பக்தி வந்தால்தான் புத்தி போய்விடுகிறதே...
என்ன செய்ய!
விடுதலை, 22.8.2001
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக