உண்மையில் வெளிப்படையாக மனம் திறந்து பேச வேண்டு மானால், இந்து மதம்
என்பதாக ஒரு மதமே இருந்ததில்லை என்பதோடு, இருக்கிறதாகச் சொல்லுவதற்கும் வகை
இல்லை. ஆனால், பின் எப்படி இந்துமதம் என்று ஒரு சொல் இருந்து வருகிறது என்றால், ஆரியர்களுடைய
மேன்மைக்கு ஆகவும், அவர்கள் மற்ற மக்களை அந்தகாரத்தில் வைத்துத் தங்களுக்கு அனுகூலமாக
ஆண்டு கொள்வதற்கு ஆகவும் மற்றும் திராவிடர்களைச் சமயம்போல் - சவுகரியம்போல்
பயன்படுத்திக் கொள்வதற்காகவும் ஏற்படுத்திக் கொண்ட சில சூழ்ச்சி முறைகளே இன்று
இந்து மதமாய் இருக்கிறது.
ஏனெனில், இந்து மதம் என்கின்ற வார்த்தையே ஆரியர்களுக்குள் ளாகவாவது எப்போதாவது
இருந்து வந்ததாகச் சொல்வதற்கு இல்லை. ஆரிய சம்பந்தமான எந்தப் பழைய ஆதாரங்களிலும்
அவர்கள் சமயாதாரமாகச் சமீபகாலம் வரை ஏற்படுத்திக்கொண்ட எந்த ஆதாரங்களிலும்கூட
இந்துமதம் என்கின்ற வார்த்தை இருந்ததாகத் தெரியவில்லை.
அன்றியும் இந்து மதம் என்றால் என்ன? அதன் கொள்கை என்ன என்று நிர்ணயித்துச்
சொல்லக்கூடியதாகவும் ஒன்றும் இல்லை. எப்படிப்பட்டவன் இந்து? எப்படிப்பட்டவன்
இந்து அல்லாதவன் என்று சொல்லுவதற்கும் ஒரு நியதி இல்லை. இந்தியாவில் உள்ள ஒரு
முகமதியனையோ, ஒரு கிறித்துவனையோ,
ஒரு பார்சியையோ, சீக்கியனையோ, ஒரு
பிரமசமாஜக்காரனையோ, ஒரு மதமும் ஒரு கடவுளும் இல்லாத பகுத்தறிவு வாதியையோ இந்து அல்லாதவன்
என்று சொல்ல ஓர் ஆதாரமும் இல்லை. இந்து மதம் என்று சொல்ல இன்று ஒரே ஓர் ஆதாரம்தான்
அனுபவத்தில் பயன்பட்டு வருகிறது. அதாவது ஆரியர்கள் மேன்மைக்கு அவர்களது நலனுக்கும்
மாறாகப் பேசுவதும், இருப்பதும் எல்லாம்தான் இன்று இந்து மதமல்லாததாய் இருக்கிறதே தவிர
இந்து மதம் என்பதற்கு ஒரு குறிப்பிட்ட கொள்கையும் திட்டமும் இல்லை.
(நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர்
பண்பாடு தந்தை பெரியார்)
ஆராய்ச்சி முடிவு
பொதுவாகவே இந்துமதம் என்பது பற்றிப் பல ஆராய்ச்சிக்காரர்கள் அப்படி
ஒரு மதமே இல்லை என்று முடிவுகட்டி மெய்ப்பித்து
இருக்கிறார்கள். இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை என்று
அய்ரோப்பியர்களாலும், இந்நாட்டுப் பெரும் புலவர்களாலும் எழுதப்பட்ட ஆராய்ச்சிப்
புத்தகங்கள் எத்தனையோ இன்றும் இருக்கின்றன.
இந்து என்கின்ற வார்த்தையே திருடன், அயோக்கியன், தொல்லை
கொடுப்பவன், நம்பிக்கைத் துரோகக்காரன், அடிமை-கூலி-காட்டுமி ராண்டி என்கிறதான
கருத்துக்களைக் கொடுப்பது என்று பல பாஷைகளில் பரிச்சயமுள்ள அநேகர் எழுதி
இருப்பதோடு, இதை மெய்ப்பிக்க இன்னும் பல இங்கிலிஷ் அகராதிகள் இருக்கின்றன.
பொதுவாகவே இந்து மதம் என்றால் ஆரியர் கொள்கை என்றும், புரோகித சமயம்
என்றும், பார்ப்பனர்களை உயர்வாய்க் கொண்ட தென்றும், இந்து என்றால்
பார்ப்பனர்களைப் பின்பற்றுகிறவன் என்றும், விந்தியமலைக்கு வடக்கே உள்ள மக்களைக்
குறிப்பதென்றும், ஆதிகால மனிதத் தன்மையைக் குறிப்பிடுவதென்றும், அகராதிகளிலும்
சகல கலாநிதி என்னும் பழங்கால முதல் நாளது வரையில் ஆராய்ச்சி செய்த அறிவு
நூல்களிலும் பரக்கக் காணலாம்.
(நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு - தந்தை
பெரியார்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக