புதன், 2 ஆகஸ்ட், 2017

நீதிக்கட்சித் தலைவர்


1938 திசம்பர் இதே நாளில் (29) சென்னையில் நீதிக்கட்சியின் 14ஆவது மாகாண மாநாடு நடைபெற்றது. அந்த நாளில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் இரண்டாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் இருந்தார்.

அந்த நேரத்தில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில்தான் தந்தை பெரியார் நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பதவியைப் பிடிப்பதற்காகச் சூழ்ச்சிகள், திட்டங்கள், கொல்லைப்புற வழிகள், சாம, பேத, தான, தண்டங்களைப் பின்பற்றும் உலகத்தில், சிறைச்சாலையிலே கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர்மீது தலைமைப் பதவி திணிக்கப்படுகிறது என்றால், இந்த அதிசயம் தந்தை பெரியாரிடத்தில் மட்டுமே நிகழ்ந்த ஒன்றாகும்.

மாநாட்டுத் தலைவர் தந்தை பெரியார் சிறையில் இருந்தார். அவர்கள் உருவம் தேரில் வைத்து சிறையில் இருப்பதுபோல வடிவமைக்கப்பட்டு, ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு, தலைவர் அமரும் நாற்காலியிலும் அணி செய்யப்பட்டது.
தந்தை பெரியாரால் எழுதப்பட்ட தலைமையுரையை சர்..டி.பன்னீர்செல்வம் படித்தார். என் தோளுக்கிட்ட மாலையை தந்தை பெரியாரின் தாளுக்குச் சூட்டுகிறேன் என்று கூறி தந்தை பெரியார் படத்துக்குச் சூட்டினார்!

50 ஆயிரம் பேர்கள் கூடிய அந்த மாபெரும் மாநாடு உணர்ச்சியின் எரிமலையாகத் தகித்தது! தலைவர் சிறையில்! பொழுதோ இந்தி எதிர்ப்புப் போர் நடக்கும் காலகட்டம்! கேட்க வேண்டுமா?

மாநாட்டில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் எங்கள் மாபெருந் தலைவரே! உங்கள் உடல் சிறைப்படுத்தப்பட்டிருந்தாலும், உங்கள் வீரத் திருவுருவத்தின் முன் நாங்கள் அனைவரும் எழுந்து நின்று கட்சி வளர, மக்கள் வாழ, நோக்கம் நிறைவேற, ஓயாது உழைத்து வெற்றி பெறுவோம் என உறுதி கூறுகிறோம்! என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் என்றால், அந்தக் கொள்கை உணர்வையும், தலைமையை மதிக்கும் பான்மையையும், நம்பிக்கையையும் நினைத்துப் பார்க்க வேண்டும்!


விடுதலை ஒற்றைப்பத்தி - 1, 29.12.1999

நூல் :  ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...