புதன், 2 ஆகஸ்ட், 2017

விஜய்மல்லையா



அரசியல் அயோக்கியர்களின் புகலிடம் என்பது போன்ற வாசகங்கள் அரசியலைப்பற்றி ஏராளம் உண்டு! அரசியல் என்றாலே அப்படிதான் - அங்கே கொள்கையாவது, மண்ணாங்கட்டியாவது; எல்லாம் கொள்ளையடிப்புதான், படாடோபம்தான், சொகுசு வாழ்க்கைதான், அதிகாரப் போதைதான் என்கிற பேச்சும் பரவலாகப் பொதுமக்களிடமும் உண்டு! நேற்றுவரை இந்தப் பேர்வழி எப்படி இருந்தார் என்பது ஊருக்குத் தெரியாதா? இப்பொழுது பார் எவ்வளவு ஆட்டம்பாட்டம்; ஆர்ப்பாட்டம் - எவ்வளவு ஆடம்பரம்எல்லாம் அரசியலில் அடித்த கொள்ளைதான் - அரசியலில் முதலீடு என்பதே பித்தலாட்டம்தான்; குறுக்கு வழிதான் என்ற எண்ணமும் சமுதாயத்தில் மேலோங்கி நிற்கிறது.

முதல் இல்லாமலேயே ஒரே தாண்டலில் மேலே தாவிவிடலாம் என்கிற எண்ணம் இளைஞர்களுக்கே கூட இப்பொழுது ஏற்பட்டுவிட்டது. அண்மையில் மாநிலங்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் கட்சி மாறி வாக்களிப்பு ஓகோ என்று நடந்திருக்கிறது! பரவலாகப் பல கட்சிகளிலும் இந்தப் பாதிப்பு! கட்சி மேல் மட்டங்களின் மண்டைகளில் குடைச்சல்! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே இலஞ்சம் வாங்கிக் கொண்டு கட்சி மாறி வாக்களிக்கிறார்கள் என்றால், அதன் பாதிப்பு சமுதாயத்தின் வேர்வரை ஓடிச் சென்று தாக்காதா?

கர்நாடக மாநிலத்திலிருந்து - மாநிலங்களவைக்குப் போட்டியிட்டவர்களுள் ஒருவர் வித்தியாசமானவர்; அவர் ஒன்றும் அரசியல்வாதியல்ல; சாராய சாம்ராஜ்யம் நடத்திவரும் விஜய்மல்லையாஎந்தத் தைரியத்தில் இவர் போட்டியிட்டார்? இந்தத் தேர்தலில் அந்தந்தக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அந்தந்தக் கட்சி வேட்பாளர்களுக்குத்தானே வாக்களிப்பார்கள்? ஆனாலும், விஜய் மல்லையா நின்றார் என்றால் யாரை நம்பி - எதை நம்பி? எல்லாம் பணத்தை நம்பிதான்! அவர் நம்பிக்கை முழுவதுமாக வீண் போகவில்லை. 35 சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்றுவிட்டாரே! இன்னும் கொஞ்சம் முண்டியிருந்தால் வெற்றிகூடப் பெற்றிருப்பார்போல் தோன்றுகிறது!

தேர்தலில் தோல்வி கண்ட மல்லையா பேசுகிறார்; அரசியல் தலைவர்களுக்குப் பிராந்தி தேவை; பிராந்தி விற்ற பணம் தேவை; பிராந்தி அதிபரின் விமானம் தேவை! ஹெலிகாப்டர் தேவை! அந்தப் பிராந்தி அதிபர் மட்டும் அரசியலுக்குத் தேவையில்லையா - எவ்வளவு நாளைக்குத்தான் நாங்கள் பின் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருப்போம்? என்று அரசியல்வாதிகளின் முகத்திரையைக் கிழித்துவிட்டார். அந்தக் கேள்விகளில் அறவே அர்த்தம் இல்லை, உண்மையில்லை என்று கூறமுடியுமா?


விடுதலை, 8.4.2000
 விடுதலை ஒற்றைப்பத்தி – 1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...