அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் வரவேற்கத்தக்க நூதனமான போராட்டம் ஒன்றைக் கடந்த குடியரசு பொன்விழா நாளில் (26-1-2000) நடத்தியுள்ளனர்!
காலை 10 மணிமுதல் மாலை 6 மணிவரை நின்றுகொண்டே உண்ணாவிரதப் போராட்டம்!
எதற்காக இந்தப் போராட்டம்?
இரயில்களில் ஏழை மக்களும், நடுத்தர மக்களும் அன்றாடம் பயணம் செய்யும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை (Unreserved Compartments) அதிகப்படுத்தித்
தரவேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை.
குடியரசுப் பொன் விழாவினை இதற்காக அவர்கள் தெரிந்தெடுத்ததும் மிகவும் பொருத்தமானதுதான்.
வறுமைக் கோட்டுக்கும் கீழே கிடந்துழலும் மக்கள் சரிபகுதியாக இருக்கும் ஒரு நாட்டில் அந்த இந்நாட்டு மன்னர்கள் இரயிலில் பயணம் செய்வதற்கான அடிப்படை வசதிகள்கூடச் செய்து கொடுக்கப்படாதது எவ்வளவுப் பெரிய மோசடி!
இரயிலின் முன் பகுதியில் ஒரு பெட்டி பின் பகுதியில் இன்னொரு பெட்டி - முன் பதிவு செய்ய வசதியும், வாய்ப்பும் இல்லாத இந்தப் பெரும்பான்மை மக்களுக்காக இரயில்வே துறையின் ஏற்பாடு இவ்வளவுதான்!
இரயில் புறப்படும் நேரத்தில் இந்த மக்கள் படும் அவதி, அல்லாடும் நிலை - இரத்தக் கண்ணீரை வரவழைக்கக் கூடியது! ஏழை, எளிய, படிக்காத வறுமைப் புண்களைத் தாங்கி நிற்கும் இந்த மக்கள் எந்தப் பெட்டியில் ஏறுவது என்பதைக்கூடத் தெரிந்துகொள்ளாதவர்களாய்ப் படும் அவதி கொஞ்சநஞ்சமன்று! ஒவ்வொரு பெட்டியாக ஏறுவதும் - இங்கே வரக்கூடாது
- நுழையக் கூடாது என்று இரயில்வே துறையினரிலிருந்து பயணிகள்வரை பிடித்துக் தள்ளுவதும் நாளும் நடக்கக் கூடியதுதான்.
பிள்ளைகளையும், மூட்டை முடிச்சுகளையும் தூக்கிக் கொண்டு பிளாட்பாரத்தில் அவர்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். கடைசியாக அவர்களுடைய பெட்டியைக் கண்டுபிடித்து ஏற முயன்றால்,
அங்கே ஏற்கெனவே படிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் மக்கள்!
இந்தக் கண்ணராவிக் காட்சியை நாளும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அமைச்சர்களும் பார்த்துக் கொண்டுதான் போகிறார்கள்.
முதல் வகுப்பில் குளிர் வசதி செய்யப்பட்ட பெட்டிகளை நோக்கி ஆனால், விடிவு மட்டும் கிடைக்கவில்லை!
பணம் கொடுத்து டிக்கெட் பெற்றவர்களுக்கு,
குறைந்தபட்சம் உட்காரக்கூட ஒரு இருக்கை உத்தரவாதம் இல்லை! இந்த யோக்கியதையில் இங்கே ஒன்பது அய்ந்தாண்டுத் திட்டங்களாம்!
விமானத்தில் தனி வகுப்பில் (நுஒநஉரவஎந ஊடயளள) பயணம் செய்யும் மந்திரிமார்களின் கண்கள் திறக்குமா?
இல்லாவிட்டால் வறுமைக் கோட்டுக்கும் கீழே நாளும் அல்லாடும் மக்களின் கண்களில் எரிமலை வெடிக்கும் - எச்சரிக்கை!
விடுதலை ஒற்றைப்பத்தி - 1,
1.2.2000
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக