இன்றைய நாள் இந்தியக் குடியரசுப் பொன் விழா நாள்!
இந்தியத் துணைக் கண்டத்தின் தலைநகரில் பல்வேறு மாநிலங்களின் சார்பாக கலை நிகழ்ச்சிகள்! உலகமே கண்களைச் செலுத்தும் அணி வகுப்புகள்!! இன்னோரன்ன சிறப்புகள்!!!
அஷ்டமி, நவமியெல்லாம் பார்த்து வெள்ளைக்காரனிடமிருந்து இந்திய சுதந்திரத்தை சாஸ்திரோத்தமாகப் பெற்றுக் கொண்டாகிவிட்டது! ஒன்பது அய்ந்தாண்டுத் திட்டங்களையும் கண்ணாரப் பார்த்தாகிவிட்டது.
மக்களின் சமூக,
பொருளாதார வளர்ச்சி மகிழ்ச்சி அடையக்கூடிய அளவில் உள்ளனவா?
இந்த நாளில் அரசு மட்டுமல்ல
- ஒவ்வொரு குடிமகனும், மகளும்கூட தங்களுக்குள் ஒரு கூட்டல், கழித்தலைப் போட்டுப் பார்க்க வேண்டாமா?
பிறப்பின் அடிப்படையில் பிளவை, பேதத்தை ஏற்படுத்தும் ஜாதிக்கு ஜரிகைப் பூணூல் போட்ட பாதுகாப்பு! இன்னும் கோவில் கருவறைகளுக்குள் பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர் ஆகலாம் என்கிற பிறவி முதலாளித்துவக் கொடுமை! இந்த ஜாதியம் இருக்கும்வரை - அதன் தொடர்பான கொடிய திராவக வீச்சுகள் சமூகத்தின் முகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்வரை சுதந்திரம் வந்துவிட்டதாக மனநிலை பாதிக்கப்பட்டவன்கூடக் கூற மாட்டானே!
பொருளாதாரத்தில்தான் என்ன வாழ்கிறது?
திட்டக் கமிஷன் உறுப்பினர்களான டாக்டர் எஸ்.பி.குப்தா, டாக்டர் கவ்ரவ்தத் ஆகியோர் புள்ளி விவரங்களோடு வெளுத்து வாங்கியுள்ளனர்.
1980-களில் வறுமைக் கோட்டுக்கும் கீழே தள்ளப்பட்ட மக்களின் எண்ணிக்கையில்
10 விழுக்காடு அளவு குறைந்திருந்தது.
1990-க்கும் 1997-க்கும் இடைப்பட்ட காலத்தில் வறுமைக் கோடு வாழ் மக்களின் எண்ணிக்கை ஏழு கோடி அதிகரித்துவிட்டது என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தாராளமயம், உலக மயம், தனியார் மயம் என்கிற சொல் ஜாலங்களின் பின்னலில் மக்கள் தங்கள் வாழ்க்கை என்னும் கண்களைப் பறிகொடுக்கும் கொடுமைதான் நாளும் நடந்துவருகிறது.
பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த வி.கே.கிருஷ்ணமேனன் அவர்கள் ஒருமுறை மும்பைப் பொதுக்கூட்டம் ஒன்றில் (அக்டோபர் 1980) கூறினார்.
பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாவும்,
ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாகவும் ஆகின்றனர் என்று சொல்லப்படுகிறது.
பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாவது உண்மைதான்.
ஆனால்,
ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாக ஆகவில்லை. அவர்கள் முன்னாலேயே ஏழ்மையின் பாதாளத்தை அடைந்துவிட்டனர் என்றார்.
இந்தியாவின் குடியரசுப் பொன் விழாவில் இந்த உண்மையை ஒப்புக் கொண்டு அதற்கு மேல் சிந்திப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
விடுதலை ஒற்றைப்பத்தி - 1,
26.1.2000
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக