நவம்பர் 19 - ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். இந்நாளில்தான் 1923இல் நீதிக் கட்சியின் இரண்டாவது அமைச்சரவை சென்னை மாநிலத்தில் பதவியேற்றது.
பனகல் அரசர் பிரதமராகப் பதவியேற்றார். மகாமகா சாணக்கியன் என்று பார்ப்பனர்களாலேயே கருதப்பட்டவர் பனகல் அரசர்.
இந்து அறநிலையத்துறைப் பாதுகாப்பு மசோதா நிறைவேறக் காரணமாக இருந்தவர் அவர். இந்த மசோதாவுக்கு எவ்வளவோ எதிர்ப்புகள் கிளப்பிவிடப்பட்டன.
பார்ப்பனர்களின் பண்ணையமாக, பெருச்சாளிகளின் கூடாரமாக இருந்த கோவில் துறைக்குத் தணிக்கை முறை - சட்ட திட்டங்களைக் கொண்டுவரக் காரணமாக இருந்தது இந்தச் சட்டம். அபிராமி அம்மன் மூக்கில் மின்னிய வைர மூக்குத்தி அபிராமி பட்டரின் பாரியாள் மூக்கிலும் மின்னுகின்ற கொள்ளையெல்லாம் இருந்தது - அதற்கு மூக்கணாங்கயிறு போட்டது - நீதிக்கட்சியின் இந்து அறநிலையத் துறைப் பாதுகாப்புச் சட்டம்!
மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்றிருந்த நிபந்தனையைக் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்தவரும் பனகல் அரசரே!
சென்னை மாநிலக் கல்லூரியில் (பிரசிடென்சி) தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய பெரும்புலவர் கா.நமச்சிவாயனாருக்கு
81 ரூபாய் சம்பளமும், அதே கல்லூரியில் சமஸ்கிருதப் பேராசிரியராகப் பணியாற்றிய குப்புசாமி சாஸ்திரி என்கிற பார்ப்பனருக்கு 300 ரூபாய் சம்பளமும் அளிக்கப்பட்ட மனுதர்மக் கொடுமையை எதிர்த்து தந்தை பெரியார் குடிஅரசு இதழில் எழுத, அதன் நியாயத்தைப் புரிந்துகொண்டு சம சம்பளம் அளிக்க ஆணை பிறப்பித்ததும் இந்த பனகல் அரசர்தான்.
(பெரியார் பேச்சு,
விடுதலை
15.2.1960)
வெள்ளைக்காரர்களின் பாதந்தாங்கி என்று நீதிக்கட்சியைப் பற்றிக் கூசாமல் கூறுவார்கள் பார்ப்பனர்களும், காங்கிரசாரும். உண்மை என்னவென்றால், வெள்ளைக்காரர்களின் ஆதிக்கத் துறையாக இருந்த மருத்துவத் துறையை இந்திய மயமாக்கியதும் இந்த அமைச்சரவைதான் - ஆங்கிலேயர்களின்
கடும் எதிர்ப்புகளுக்கிடையே!
எந்தப் பொதுச்சாலையிலோ,
தெருவிலோ,
எந்த கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இருந்தாலும் அதில் எந்த இனத்தைச் சேர்ந்த மனிதனாய் இருந்தாலும்,
நடப்பதற்கு உள்ள உரிமையை யாரும் தடுக்க முடியாது. எந்த அரசாங்க அலுவலகமாக இருந்தாலும் அல்லது கிணறு, குளம் போன்றவைகளாய் இருந்தாலும் அல்லது பொது வர்த்தகம் நடைபெறும் இடமாய் இருந்தாலும்,
இவைகளில் எல்லாம் ஜாதி இந்துக்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ,
அவ்வளவு உரிமைகளும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உண்டு என்கிற ஆணை எண் 2660 (25.9.1924) பிறப்பிக்கப்பட்டதும் இந்த அமைச்சரவையில்தான்.
இன்னும் எத்தனை எத்தனையோ சாதனைச் சுரங்கங்கள் உண்டு. அவற்றை இந்நாளில் நன்றியுடன் நினைவு கூர்வோம்!
விடுதலை ஒற்றைப்பத்தி - 1,
19.11.1999
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக