செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

பிணைந்திருந்து பயன் என்ன?


இந்தியா உடன் ஒன்றாய் இருந்ததால் இதுவரை எவ்வித முன்னேற்றமும் ஏற்பட்டுவிடவில்லை என்றும், அதற்கு மாறாகப் பல கெடுதிகள் ஏற்பட்டனவென்றும், முன்னேற்றம் அடையாமல் நிலைமை தேங்கிவிட்டதோடு அல்லாமல் குறிப்பிடத்தகுந்த அளவுக்குப் பின்னாலும் போயிருக்கிறோமென்றும், நாம் தனித்து நின்று நம் காரியத்தையே நாம் கவனிப்பதற்கு இந்தியா என்னும் பெரும் கசாகூளத்திலிருந்து விலகிக் கொள்ளாவிட்டால், இனியும் கேடடைவோம் என்றும், சமுதாயத்துறையில் நாம் மைனாரிட்டிகளாக ஆகிவிட்டோம் என்றும், சமயத்துறையில் கீழ் மக்களாகவும், நாலாம் ஜாதியாகிய பிறவி அடிமை மக்களாகவும் ஆய்விட்டதோடு, உலகத்தின்முன் காட்டுமிராண்டிகளாகக் கருதப்பட்டு விட்டோமென்றும், மற்றும் நாம் ஆரியர்களாலும், அவர்கள் நம்மை நசுக்க உதவி அளிக்கும் வட நாட்டாராலும் முறையே நாம் எவ்வளவு காட்டிக் கொடுக்கப்பட்டும், சுரண்டப்பட்டும் தலை தூக்க முடியாத நிலையில் ஆழ்ந்துவிட்டோம் என்றும், இத்தியாதி காரியங்களால் நாம் இனி இந்தியா என்று போலிக்கூட்டு சம்பந்தமில்லாமல் விலகிக் கொண்டு திராவிட எல்லை மாத்திரம் கொண்ட திராவிடம் என்கின்ற ஒரு தேசத்தைத் தனித் தேசமாக ஆக்கிக் கொண்டு பூரண சக்தி ஏற்படும் வரை பிரிட்டிஷ் பாதுகாப்பு உதவியில் இருந்து வந்து, பிறகு உலகில் உள்ள மற்ற பூரண சுயேச்சைத் தனி நாடுகளில் ஒன்றாக விளங்கவேண்டும்

பொதுவாகவே இன்றைய உலகக் கொள்கையானது ஒவ்வொரு நாடும் பெரும் பரந்த ஜனத்தொகை, எல்லை ஆகியவற்றின் பிடிப்பினிலிருந்து பிரிந்து சிறு சிறு அளவான சிறு நாடாக இருந்து அந்தந்த எல்லையின் சமுதாயத்தின் தேவைகளையும் முன்னேற வழிகளையும் கவனிப்பதுதான் பொதுஜன சமுதாய முதலிய முன்னேற்றத்திற்கு அனுகூலமான வழி என்ற கொள்கை (டிசென்றலேஷன்) என்று தெரிய வருகிறது.

எப்படி என்பதற்குப் பிரத்தியட்ச உதாரணம் கிரேட் பிரிட்டனிலிருந்து அயர்லாந்து பிரிந்து முற்போக்கடைந்து வருவதும், அது ஒரு சமயம் அதிக கஷ்டமான உதாரணமென்றால் இந்தியாவில், இருந்து பர்மா பிரிந்து முன்னேற்றமடைந்து வருவதும் போதுமானதாகும்.

தனி மனிதனுக்கோ ஒரு தனிச் சமுதாயத்திற்கோ முன்னேற்ற உணர்ச்சி வரவேண்டுமானால், அதைத் தூண்டும் அவசியம் ஒன்று இருந்தே ஆகவேண்டும். இன்றைய நிலைமையில் இந்தியா முன்னேற்ற மடைய வேண்டும் என்கின்ற உணர்ச்சி நமக்கு ஏற்பட வேண்டுமானால், அதைத் தூண்டும் அவசியம் நமக்கு என்ன இருக்கிறது? இதுவரை இந்தியா அடைந்த முன்னேற்றத்தில் அல்லது இதுவரை இந்தியாவுக்குக் கிடைத்த லாபகரமான சாதனத்தில் யார் என்ன பலனை அடைந்தார்கள்? குறிப்பாக நமக்கு-திராவிடத்துக்கு அதனால் என்ன நன்மை ஏற்பட்டது? அல்லது எந்தவிதமான கஷ்டம் ஒழிந்தது? என்று பார்த்தால், நம் போன்றவர்கள் வெட்கப்பட வேண்டியவர்களாக இருக்கிறோமே அல்லாமல், திருப்தி அடையத்தக்க சமாதானமானது உண்டா என்று கேட்கிறோம்.

(நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு - தந்தை பெரியார்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...