ஆரிய புராணக் கதைகளை ஆதாரமாய்க் கொண்ட கல்விகளைக் கற்பிக்கத்
திருப்பதியில் பன்னிரண்டு லட்ச ரூபாய் செலவில் கல்லூரி வைத்து ஆரியர்களையே
உபாத்தியாயர்களாய்ப் போட்டுத் திராவிடன் என்கின்ற உணர்ச்சியே அற்று ஆரியமயமாக வேலை
செய்துவிட்டார்.
பள்ளிக்கூடப் புத்தகங்களில் ஆரியர் - திராவிடர் என்கின்ற வார்த்தைகளே
வராக்கூடாதென்று தடுத்துப் புதிய முறையில் புத்தகங்கள் எழுதச் செய்தார். அதுபோலவே
இப்போது புதிய இந்து தேச சரித்திரங்கள், எழுதப்பட்டு, அதில் ஆரியன்
எப்போது இந்தியாவுக்கு வந்தான் என்கிற விஷயங்களையே மறைத்து, அலெக்சாந்தர்
வந்த காலத்திலிருந்தே சரித்திரங்கள், பாடங்கள் துவக்கி எழுதப்படுகின்றன.
தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள், சமஸ்கிருதத்தைக் கட்டாயப்பாடமாக்கத்
திட்டங்கள் போட்டுக் கொண்டிருக்கிறார்.
படிப்பை வருணாச்சிரம முறையாக்கி 4-ஆம் வகுப்பாருக்குக் கைத்தொழில்
மாத்திரம் ஜீவனமும், அறிவும் ஆக இருக்க வேண்டுமே ஒழிய மற்றவை தேவையில்லை என்று வார்தா
திட்டம் வகுக்கப்பட்டு, நடைமுறையில் வந்து கொண்டிருக்கிறது.
அரசியல் பதவியில், உத்தியோகத்தில் ஆரியரல்லாத அதாவது திராவிட மக்கள் அமர்ந்திருந்ததை
ஒழிக்கச் சூழ்ச்சி செய்து, இன்னும் அய்ந்து வருஷகாலத்தில் சக இலாக்காக்களிலும் ஆரியர்களே மாகாண
ஜில்லா தலைமை உத்தியோகத்தில் இருக்கும்படியாகச் செய்யப்பட்டாய் விட்டது.
இந்திய அரசியல் தலைவர் காந்தியாரே ராமராஜ்யத்திற்காகவும் வருணாசிரமப்
புனருத்தாரணத்திற்காகவும் பாடுபடுகின்றனர். அதுதான் காங்கிரஸ் கேட்கும் சுயராஜ்யத்தின்
தத்துவமென்று பச்சையாய்ச் சொல்லிவிட்டார்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் சுயபுத்தியோ சுயமரியாதையோ உள்ள திராவிட
மகன் எந்தத் துறையிலும் தலைவராக இருக்க யோக்கியதை இல்லாமல் செய்யப்பட்டாய்விட்டது.
ஆரியர்களைக் கண்டால், திராவிட மக்கள் நடுங்கிச் சரணடையும்படியான கொடுங்கோன்மை முறையே
நல்லாட்சி என்பதாகக் கூறப்பட்டு வருகிறது.
(நூல் - தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு - தந்தை
பெரியார்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக