கல்வி வள்ளல் காமராசரின் 98ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று (5-7-1903). தந்தை பெரியாரால் இரட்சகர் என்று அன்பொழுகப் பாராட்டப்பட்டவர்!
நல்ல பெயர் வைக்க வேண்டுமா என்று கேட்டு குழந்தைகளுக்கு காமராஜ் என்று பெயர் சூட்டினார் தந்தை பெரியார் என்றால், காமராசரின் சிறப்புக்கு வேறு என்ன அங்கீகாரம் தேவை?
காங்கிரசின் கடும் எதிரியாக இருந்த தந்தை பெரியாரை அதைக்கூட ஒருபுறம் ஒதுக்கி காமராசரைத் தாங்கிப் பிடிக்க வைத்தது - சூத்திரப் பஞ்சம மக்களுக்கு காமராசர் கருணை உள்ளத்தோடு வாரி வாரி வழங்கிய கல்விச் செல்வம்தான்!
அதே காரணத்தால்தான் பார்ப்பனர்களின் எதிரியாக அவர் ஆக நேர்ந்தது! குலக்கல்வித் திட்ட கர்த்தா ஆச்சாரியார் என்று சொல்லும் அதே வேகத்தில் கல்விக் கண்ணைத் திறந்த வள்ளல் காமராசர் என்று சொல்லும் நிலைதான் தமிழ்நாட்டின் மிக முக்கிய வரலாற்றுப் பதிவேடு!
தந்தை பெரியார் காரணமாகவும், காமராசர் காரியமாகவும் இருந்ததை யார்தான் மறுக்க முடியும்?
ஆச்சாரியாரால் கறுப்புக் காக்கை என்று அடையாளம் காட்டப்பட்டவர்தான் காமராசர்! காக்கை என்றாலே கறுப்புதான்! பின் ஏன் கறுப்புக் காக்கை என்று அழுத்தம் கொடுத்து அடையாளம் காட்ட வேண்டும்? அங்கேதான் தந்தை பெரியார் வருகிறார்; தந்தை பெரியாரின் தத்துவம் வருகிறது!
கதர்ச் சட்டைக்குள் கறுப்புச் சட்டை என்று கல்கி கார்ட்டூன் போட்டதே, அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டால் ஆச்சாரியார் கறுப்புக் காக்கை என்று அடைமொழி கொடுத்துச் சொன்னதற்கான காரணம் விளங்கும்.
காமராசர் ஆட்சியை அமைக்கப் போகிறோம் என்று சொல்லும் நல்லவர்களும், தேசியவாதிகளும் தமிழ்நாட்டுக்குரிய இந்த மண்ணின் வாசனையைப் புரிந்து கொள்ளக் கடமைப்பட்டுள்ளார்கள்.
காமராசர் தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் புதைத்துள்ள இந்த மண்ணுக்கே உரிய தனித் தன்மையான வித்து என்பதை மறக்க வேண்டாம்! வாழ்க காமராசர்!
விடுதலை, 15.7.2000
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக