புதன், 2 ஆகஸ்ட், 2017

நந்தனல்ல!

தில்லைக்குச் சென்று அம்பலவாணனைத் தரிசிக்க வேண்டும் என்று கருதினான் அந்தக்காலத்து நந்தன். நாளை போவோம், நாளை போவோம் என்று நாளும் அவன் சொல்லிக் கொண்டிருந்தால், அந்தப் பக்தனுக்கு திருநாளைப் போவார் என்ற பெயரே கூட நிலைத்தது என்பார்கள் பக்தகோடிகள். அது மூடநம்பிக்கைச் சங்கதி.

இதோ பட்டுக்கோட்டையில் ஒரு பெரியார் பெருந்தொண்டர் .பி.ஜெயராமன் கழகம் நடத்திய பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டுச் சிறைக்கோட்டம் சென்றவர்.

வயது 72.எப்படியும் புதுதில்லி செல்லவேண்டும்; பெரியார் மய்யத்தைக் காணவேண்டும் என்று சதா கூறிக்கொண்டிருந்தார். அதைப் பார்த்துவிட்டுத்தான் என் கண்களை மூடவேண்டும் என்று சதா சொல்லிக்கொண்டே இருந்த அந்தப் பெரியார் பெருந்தொண்டர் மே மாதம் இயற்கை அடைந்துவிட்டார்.

10 ரூபாய் 60 காசை பொட்டலமாக்கி கட்டி அதில் பெரியார் மய்யம் என்று எழுதியும் வைத்திருந்தார்.

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பட்டுக்கோட்டை நா.இராமாமிர்தம் அவர்கள் அந்தத் தொகையை அனுப்பி, அதனைப் பெரியார் மய்ய நிதியில் சேர்த்துக் கொள்ளச் சொல்லியுள்ளார்.

பக்தன் நந்தன் தில்லை செல்லவேண்டும் என்று விரும்பியதற்கும், பெரியார் பெருந்தொண்டர் தில்லி செல்லவேண்டும் என்று நம்பியதற்கும் அடிப்படையில் வேறுபாடு உண்டு.

முன்னது மூடநம்பிக்கையை ஒட்டியது - பின்னது பகுத்தறிவின் அடிப்படையிலானது.

தந்தை பெரியாரின் கொள்கைகள் ஒரு காலத்தில் வீட்டைத் தாண்டிச் செல்ல முடியாது; வீதியைத் தாண்டிச் செல்ல முடியாது என்றிருந்த எதிர்ப்புகளையெல்லாம் தாண்டி, இந்தியாவின் தலைநகரிலேயே மய்யம் கொண்டுள்ளது என்று நினைத்தபோது, அந்த மய்யத்தை தம் வாழ்நாளில் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டது - நியாயப்பூர்வமான அறிவுப்பூர்வமான ஆசைதானே!

மேலோக ஆசையும் மேல் சபை ஆசையும், மந்திரி ஆசையும் பிச்சிப் பிடுங்கிக் கொண்டிருக்கும் மனித சமூகத்தில், தான் ஏற்றுக்கொண்ட கொள்கை - தம்மை ஒப்படைத்துக் கொண்ட இயக்கவழி சிந்தனை என்பது பெரியார் தொண்டர்களுக்கே உரித்தான தனிச் சிறப்பாகும்.

வாழ்க பெரியார் தொண்டர் .பி.ஜெயராமன்.


விடுதலை ஒற்றைப்பத்தி - 1, 24.6.2000

நூல் :  ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...