அய்யப்ப விரதம் இருக்கும் பக்தர்கள் சொல்லும் ஒரு முக்கியக் காரணம் -
30 நாள் விரதம் இருக்கும்போது மது, மாது, புகை என்பது போன்ற பழக்கங்களிலிருந்து விலகி இருக்கிறார்கள் என்பதாகும்.
மனிதன் என்றால் எல்லாக் காலத்திலும்,
எல்லா நிலைகளிலும் ஒழுக்கமாக இருப்பது என்பதுதான் ஒழுக்கம் என்பதற்கே பொருள். ஒரு முப்பது நாள்கள் மட்டும் ஒழுக்கம் என்பது மற்ற காலங்களில் அது தேவையில்லை என்று கருதுவதாகவே பொருள்.
சரி. அப்படி சொல்கிறார்களே - அதிலாவது அவர்கள் சரியாக இருக்கிறார்களா?
கஞ்சாக் கடத்திய அய்யப்பப் பக்தர்கள் கைது என்று செய்தி வருகிறது!
ஜவுளிக் கடையில் திருடிய அய்யப்பப் பக்தன் கைது என்பது இன்னொரு செய்தி. இன்னோரன்ன செய்திகள் அனந்தம்! அனந்தம்!!
யு.என்.அய்.
செய்தி நிறுவனம் ஒரு தகவலைத் தெரிவித்துள்ளது.
அய்யப்பன் கோவில் இருக்கும் சபரிமலை வளாகம் புகைப்பிடிக்கத் தடை விதிக்கப்பட்ட பகுதியாகும்.
அய்யப்பன் சன்னிதானத்திலேயே புருசோத்தம நாயர் என்கிற அய்யப்பப் பக்தர் சிகரெட் ஊதிக் கொண்டிருந்தாராம். போலீஸ்காரர் ஒருவர் அதனைத் தடுக்கச் சென்றபோது,அந்த அய்யப்பப் பக்தர் போலீஸ்காரரைக் கத்தியால் குத்தியிருக்கிறார்.
போலீஸ்காரர் குத்தப்பட்டபோது சென்னையைச் சேர்ந்த கன்னிசாமி ஆறுமுகம் என்பவர் தடுக்கப் போனாராம். அவருக்கும் அடி உதை, காயம் ஏற்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பிரதீப் குமார் என்பவர் அங்கு ஓடி வந்தபோது அவரையும் அந்த அய்யப்பப் பக்தர் புருசோத்தமன் சும்மாவிடவில்லை.
கடித்துவிட்டாராம்! அதன் பின் அவர் கைது செய்யப்பட்டார் என்று யு.என்.அய்.
கூறுகிறது.
அது நடந்தது கடந்த 12ஆம் தேதி அன்று.
அய்யப்ப விரதம் போதிக்கும் தார்மீகம்,
ஒழுக்கம் இதுதானா? அய்யப்பப் பக்தர் புகைபிடித்ததே தவறு! அதுவும் புகை பிடிக்கக் கூடாது என்று தடை செய்யப்பட்ட இடத்திலேயே பிடித்தது சட்ட விரோதம்! சட்ட விரோதத்தைத் தட்டிக் கேட்ட போலீஸ்காரரைக் குத்தியது அதைவிட கொடுமை! பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்யச் சென்றவருக்கும் அடி - உதை என்றால், இது என்ன கொடுமை!
பக்தியின் ஒழுக்கம் இதுதானா?
சரி, அதெல்லாம் இருக்கட்டும்! இவையெல்லாம் அய்யப்பன் சன்னிதானத்திலேயே நடந்து இருக்கிறது. அய்யன் அய்யப்பன் என்ன செய்து கொண்டிருந்தான்? பேன் குத்திக் கொண்டு இருந்தானா?
விடுதலை ஒற்றைப்பத்தி - 1,
20.1.2000
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப் பத்தி - 1
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக